×

ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள்

*ரசாயன கழிவாக மாறும் காவிரி தண்ணீர்

பள்ளிபாளையம் : ஆவத்திபாளையம் ஓடைக்குள் 5 சாய ஆலைகளின் கழிவுநீர் குழாய்களில் இருந்து இரவு நேரங்களில் சாயக்கழிவுகள் திறந்து விடப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றில் உள்ள கொஞ்ச நீரும் இரசாயன கழிவாக மாறிவருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் குடிநீர் கழிவுநீராக மாறி குடிநீர் பிரச்னையை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.
பள்ளிபாளையம், திருச்செங்கோடு மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றுவதில் காவிரி ஆறு பெரும்பங்கு வகிக்கிறது.

இது தவிர ஈரோடு மாநகரும் காவிரி குடிநீரையே பிரதானமாக பயன்படுத்தி வருகிறது. நாமக்கல், வேலூர் பரமத்தி உள்ளிட்ட பகுதிகளுக்கும் காவிரி ஆற்றில் உள்ள நீரை எடுத்து சுத்தப்படுத்தி குடிநீராக வழங்கும் பணியினை உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொண்டுள்ளன. காவிரி கரையோரங்களில் உள்ள விவசாய பாசன நீரேற்று நிலையங்களும் ஆற்றுநீரையே பெரிதும் நம்பியுள்ளன. மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வினாடிக்கு 1000 கன அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

கோடையில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கும் முன்னெச்சரிக்கையாக தஞ்சை பாசனத்திற்கு திறந்துவிடப்பட்ட தண்ணீரையும் அரசு நிறுத்தியுள்ள சூழ்நிலையில் பள்ளிபாளையம் பகுதியில் தினம் வெளியாகும் சாயக்கழிவுகள் ஆற்றுநீரை விஷமாக்கி வருவது, சாயச்சாலைகளின் மனிதாபிமானமற்ற நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உரிமம் பெற்ற சாயச்சாலைகள், தங்கள் கழிவுநீரை சுத்தப்படுத்தி மீண்டும் சாயமிடும் பணிக்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயே அவற்றுக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அது போலவே சலவைச்சாலைகள் அனைத்தும் துணிகளையும் நூல்களையும் சுத்தப்படுத்திக்கொள்ளவே உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் இந்த விதிமுறைகள் எதுவும் ஆலைகளில் கடைபிடிப்பதில்லை.

சலவை சாலைகளில் சாயமிடும் பணிகள் நடைபெறுகிறது. அங்கு சுத்திகரிப்பு நிலையம் இல்லாததால், கழிவுநீர் தொட்டிகளில் குளோரின் வாயுவும், சுண்ணாம்பு பொடியும் கலந்து கலர் நீக்கம் செய்யப்பட்டு குழாய்கள் வழியாக இரவு நேரங்களில் திறந்துவிடப்படுகிறது. சலவைச்சாலைகளில் சாயமிடும் பணிகள் மேற்கொள்ளப்படுவதை அதிகாரிகள் தடுக்காததால், சாயச்சாலைகளும் தங்கள் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்குவதில்லை. சாயச்சாலைகளும் சலவைச்சாலைகளும் போட்டி போட்டுக்கொண்டு இரவு நேரத்தில் ஓடைகளில் கழிவுநீரை திறந்து விடுவதால் காவிரி ஆற்றில் உள்ள கொஞ்சம் நீரும் நஞ்சாகி வருகிறது.

ஆவத்திபாளையம், சமயசங்கிலி ஓடை பாலத்தின் கீழே 5 சாயச்சாலைகளின் கழிவுநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு கான்கீரீட் கலவையால் மூடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் திறந்துவிடப்படும் இந்த கழிவுநீரின் குளோரின் நெடியால் காற்று விஷமாகி மூச்சு திணறல் ஏற்படுவதால், அப்பகுதியில் வசிப்பவர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். ஆனால் இதுகுறித்த சமூக அக்கரையே இல்லாமல் இரசாயன கழிவுகளை திறந்து ஆற்றையும் காற்றையும் விஷமாக்கும் ஆலைகள் குறித்து யாரிடம் புகார் கொடுத்தால், நியாயமான நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரியாமல் மக்கள் வெறுப்படைந்துள்ளனர்.

கடந்த காலங்களில் கோடையின் வறட்சியை சமாளிக்க காவிரி நீரை பாழ்படுத்தும் ஆலைகளை ஒருமாத காலம் மூடி வைக்கும்படி மாசுகட்டுப்பாட்டு துறையினர் உத்தரவிடுவார்கள். இதனால் காவிரி ஆற்றுநீர் ஓரளவு பாதுகாக்கப்படும். ஆனால் தற்போது கழிவுநீரை திறப்பதில் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லை. விருப்பம் போல ஆற்றில் கலந்து கொஞ்சம் நீரும் இரசாயன கழிவாக மாறி வருகிறது. குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டுள்ள உள்ளாட்சி அமைப்புகள் இந்த கழிவுநீர் பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், கோடையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மாவட்ட நிர்வாகத்திற்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் அபாயம் உருவாகும்.

The post ஆவத்திபாளையம் ஓடைக்குள் திறந்துவிடப்படும் சாயக்கழிவுகள் appeared first on Dinakaran.

Tags : Avathipalayam ,Cauvery ,Pallipalayam ,Cauvery river ,Dinakaran ,
× RELATED நீர்மோர் பந்தல் திறப்பு