×

கோபி பேருந்து நிலையத்தில் 3 அரசு பேருந்துகள் ஜப்தி

*விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை

கோபி : மதுரை, அண்ணாநகரை சேர்ந்தவர் நாராயணசாமி (39). இவர் பந்தல் கான்ட்ராக்டராக வேலை வருகிறார். கடந்த 21.4.2010 அன்று அரசு பேருந்தில் நாராயணசாமியும், அவரது மகன் ஓம்காரும் (20) தேனியிலிருந்து கம்பம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு தனியார் பள்ளி அருகே பேருந்து கவிழ்ந்தது. இதில் நாராயணசாமி படுகாயமடைந்தார். இது குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் இழப்பீடு வழங்கக்கோரி கோபி சார்பு நீதிமன்றத்தில் நாராயணசாமி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெயந்தி கடந்த 2014ம் ஆண்டு ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பீடாக வழங்கவும், ஓம்காருக்கு 80 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால், போக்குவரத்து கழக நிர்வாகம் இழப்பீட்டி தொகையை வழங்காததால் கடந்த 10.2.2023-ல் நிறைவேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதன் பின்னரும் இழப்பீடு வழங்காததால் 2.2.2024 அன்று அரசு பேருந்தை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீவித்யா உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து கோபியிலிருந்து ஈரோடு நோக்கி செல்ல தயாராக இருந்த 2 அரசு பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். கோபி அருகே மல்லிபாளையத்தை சேர்ந்தவர் பொங்கியண்ணன் (65). விவசாயம் செய்து வந்தார். கடந்த 19.2.2019 ம் தேதி கோசணத்திலிருந்து கொளப்பலூருக்கு அரசு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது நரிக்குட்டை என்னும் இடத்தில் உள்ள ஒரு வளைவில் பேருந்து திரும்பும்போது பொங்கியண்ணன் பஸ்சிலிருந்து கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டு இறந்து போனார். இதுகுறித்து சிறுவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கு கோபி 3 வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெகநாதன், 22.12.2021 அன்று 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார். ஆனால் போக்குவரத்து கழகம் இழப்பீடு வழங்காத நிலையில், நீதிபதி தயாநிதி 23.1.2024-ல் அரசு பேருந்தை ஒன்றை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோபியிலிருந்து கோவை செல்ல தயாராக இருந்த அரசு பஸ்சை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கோபி பேருந்து நிலையத்தில் ஒரே நாளில் 3 பேருந்துகள் ஜப்தி செய்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

The post கோபி பேருந்து நிலையத்தில் 3 அரசு பேருந்துகள் ஜப்தி appeared first on Dinakaran.

Tags : GOBI BUS STATION ,Narayanasamy ,Madurai, Annanagar ,Omkar ,Teni ,Gampam ,Kobi Bus Station ,Dinakaran ,
× RELATED நீட் முறைகேடு ஒரு இமாலய ஊழல்:...