×

அருமனை அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய மருமகள் எதிர்ப்பு

*ஊர்மக்கள் குவிந்ததால் பரபரப்பு

அருமனை : அருமனை அருகே 5 பிள்ளைகளால் கைவிடப்பட்ட மூதாட்டி, முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார். அவரது உடலை சொந்த இடத்தில் அடக்கம் செய்ய அவரது மருமகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அருமனை அருகே மஞ்சாலுமூடு ஒற்றைப்பிலாவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னுமணி. அவரது மனைவி எமிலி (85). இந்த தம்பதிக்கு 4 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். அதில் டைட்டஸ் என்ற மகன் ஏற்கனவே ஒரு விபத்தில் இறந்து விட்டார். மற்ற அனைவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்தினருடன் தனித்தனியே வசித்து வருகின்றனர்.

பொன்னுமணியும், எமிலியும் தங்களது பழைய வீட்டில் வசித்து வந்தனர். இந்தநிலையில் பொன்னுமணி வயது முதிர்வால் இறந்து விட்டார். இதனால் தனிமையில் தங்கியிருந்த எமிலியிடம் சொத்துகளை பிரித்து தரும்படி 5 பிள்ளைகளும் தொந்தரவு செய்தனர். மேலும் சொத்துக்களை உடனே விற்றுத்தர கையெழுத்து இடுமாறும் தினமும் எமிலி தங்கியிருந்த பழைய வீட்டுக்கு வந்து அடித்து உதைத்து உள்ளனர்.

இதில் காயமடைந்த எமிலி படுத்த படுக்கையானார். இதனை அறிந்த ஊர்மக்கள் போலீசார் உதவியுடன் மூதாட்டியை மீட்டு நித்திரவிளையில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் எமிலி நேற்று காலை வயது முதிர்வு காரணமாக இறந்தார். முதியோர் இல்லத்தில் இருந்து எமிலியின் சொந்த வீட்டுக்கு அவரது உடல் கொண்டு வரப்பட்டது. எமிலி வசித்து வந்த பழைய வீட்டின் அருகே தான் அவரது கணவர் பொன்னுமணியின் கல்லறையும் உள்ளது.

எனவே அங்கேயே எமிலியின் உடலை அடக்கம் செய்ய ஊர் மக்கள் முடிவு செய்தனர். இதற்காக குழி தோண்டும் பணியில் ஈடுபட்டனர். எமிலியின் 2வது மகன் ஞானசிகாமணி. முன்னாள் ராணுவ வீரரான அவர் தற்போது கடமக்கோடு மேல்புறம் பகுதியில் வசித்து வரும் நிலையில், தாயார் இறந்ததை கேள்விப்பட்டதும் முதலில் தனது மனைவியை எமிலியின் பழைய வீட்டுக்கு அனுப்பி வைத்தார்.

விறுவிறுவென அங்குவந்த ஞானசிகாமணியின் மனைவி, இந்த இடத்தை மாமியார் எமிலி ஏற்கனவே எங்களின் பெயரில் எழுதி விட்டார். எனவே இந்த இடத்தில் அவரது உடலை அடக்கம் செய்ய விடமாட்டோம் என்று வாக்குவாதம் செய்தார். ஆனாலும் ஊர்மக்கள் தொடர்ந்து குழிதோண்டும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த முழுக்கோடு ஊராட்சி துணைத்தலைவர் சசி, வார்டு உறுப்பினர் ராஜன், முன்னாள் முதப்பன்கோடு கவுன்சிலர் ராஜு ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

மூதாட்டி எமிலியின் உடலை இங்கு அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லையென்றால் அந்த வீட்டின் முன்பு எமிலியின் உடலை வைத்து போராட்டம் நடத்துவோம் என்று ஊர் மக்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அருமனை போலீசாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். மூதாட்டி உயிரோடு இருக்கும்போதுதான் அவரை பராமரிக்கவில்லை, இறந்த பிறகும் எமிலியின் உடலை சொந்த இடத்தில் அடக்கம் செய்யவிடாமல் தகராறு செய்வது நியாயமா? என ஊர்மக்கள் தெரிவித்தனர்.இதையடுத்து மருமகள் அந்த இடத்தை விட்டு சென்று விட்டார்.
இதையடுத்து மூதாட்டியின் உடல் அவரது சொந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.

5 பிள்ளைகளும் வரவில்லை

* மூதாட்டி எமிலி இறந்த தகவல் அவரது 3 மகன்கள் மற்றும் 2 மகள்களுக்கும் தெரியும். ஆனால் யாருமே எமிலியின் உடலை கடைசியாக பார்க்க கூட வரவில்லை. 2வது மகன் அங்கு வராமலே தனது மனைவியை மட்டும் அனுப்பி உள்ளார். அதுவும் தகராறு செய்ய அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

* எமிலி தங்கியிருந்த பழைய வீடு மற்றும் அதை சுற்றியுள்ள இடம் ஆகியவற்றை 2வது மகன் ஞானசிகாமணிக்கு ஏற்கனவே எழுதி கொடுத்து விட்டார்.ஆனால் ஒரு நிபந்தனை இருந்தது. அதாவது, அந்த வீட்டில் இருக்கும் மகன் எமிலிக்கு தேவையான உணவு, பராமரிப்பு ஆகியவற்றை செய்ய வேண்டும் என உயிலில் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இதை எதுவுமே மகன் நிறைவேற்றவில்லையாம்.

The post அருமனை அருகே மூதாட்டியின் உடலை அடக்கம் செய்ய மருமகள் எதிர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Arumanai ,
× RELATED அருமனையில் ஆற்றில் மூழ்கி முதியவர் பலி: குளிக்க சென்றபோது பரிதாபம்