*விதிகள் மீறினால் கடும் நடவடிக்கை
*எஸ்.பி. எச்சரிக்கை
நாகர்கோவில் : குமரி மாவட்டத்தில் அடுத்தடுத்து டாரஸ் லாரிகளால் உயிர் பலிகள் நிகழ்ந்ததை தொடர்ந்து, புதிய கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தது. சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள்.குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் தொடர் விபத்துக்களும், உயிர் பலிகளும் ஏற்பட்டு வருகின்றன.
சமீபத்தில் சுங்கான்கடை அருகே டாரஸ் லாரி மோதி பைக்கில் சென்ற எஸ்.எஸ்.ஐ. ஜஸ்டின் பலியானார். இதே போல் கடந்த பிப்.3ம் தேதி, சுங்கான்கடை அருகே டாரஸ் லாரி மோதி, பைக்கில் சென்ற தாணுமூர்த்தி என்பவர் உயிரிழந்தார். கடந்த ஜனவரி மாதம் 23ம்தேதி, குலசேகரம் அருகே டாரஸ் லாரி மோதி கணவருடன் பைக்கில் சென்ற அனிதா என்பவர் உயிரிழந்தார். ஜனவரி மாதம் 13ம் தேதி குழித்துறை அருகே டாரஸ் லாரி மோதி கணவருடன் பைக்கில் சென்ற பீனா என்ற பெண் உயிரிழந்தார். ஒரு மாதத்தில் டாரஸ் லாரி மோதி 4 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
டாரஸ் லாரிகள் அதி வேகமாக செல்வதுடன், டிரைவர்கள் சிலர் குடிபோதையிலும் வாகனத்தை ஓட்டி செல்கிறார்கள். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களை இவர்கள் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.கனிமங்கள் கொண்டு செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த வேண்டும். குமரி மாவட்டம் வழியாக கனிமங்கள் கொண்டு செல்வதை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டன.
ஏற்கனவே கனிமங்கள் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளை கட்டுப்படுத்தும் வகையில், மாவட்ட நிர்வாகம் 10 டயருக்கு மேற்பட்ட லாரிகளில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதித்து இருந்தது. ஆனால் நீதிமன்றத்துக்கு சென்று அந்த தடைக்கு, டாரஸ் லாரி உரிமையாளர்கள் தடை வாங்கினர். இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொடர்ச்சியாக உயிர் பலிகள் நிகழ்ந்து, பொதுமக்கள் போராட்டம் வெடித்ததை தொடர்ந்து குமரி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் ஓடுவதை முறைப்படுத்துவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
சமீபத்தில் இது தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர், எஸ்.பி. சுந்தரவதனம் ஆகியோர் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் கனிம வளங்களை ஏற்றி செல்லும் டாரஸ் லாரிகள் குமரிக்குள் வந்து செல்ல நேர கட்டுப்பாடு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி கனிம வள சரக்கு காலி வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டும் இயங்க அனுமதிக்கப்படும்.
கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மாவட்டத்துக்குள் நுழைய தடை விதிப்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும் அதிக வேகம், மது போதையில் வாகனம் ஓட்டுபவர் மீதும், அவரை அனுமதிக்கும் உரிமையாளர் மீதும் மோட்டார் வாகன சட்டம், இந்திய தண்டனைச் சட்டத்தின் படி வாகனங்களை கைப்பற்றி தேவைப்படின் சிறை நடவடிக்கை எடுக்கவும், கனிமவளத்துறையால் வழங்கப்படும் அனுமதிச்சீட்டை முறையாக பயன்படுத்தாத வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவும் கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த புதிய உத்தரவு நேற்று (20ம் தேதி) முதல் அமலுக்கு வந்தது. இதையடுத்து எஸ்.பி. சுந்தரவதனம் உத்தரவின் பேரில் அனைத்து சோதனை சாவடிகளிலும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணித்தனர். அனுமதிக்கப்பட்ட நேரம் தவிர மற்ற நேரங்களில் டாரஸ் லாரிகள் நுழைந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சுந்தரவதனம் எச்சரிக்கை செய்துள்ளார்.
குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிகள் தவிர காணிமடம், அஞ்சுகிராமம், ஆரல்வாய்மொழி, குமாரபுரம் ஆகிய இடங்களில் உள்ள சோதனை சாவடிகளிலும் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர மற்ற நேரங்களில் டாரஸ் லாரிகள் அனுமதிக்கப்பட வில்லை.
மேலும் சோதனை சாவடிகளில் ப்ரீத் அனலைசர் மூலம் டிரைவர்கள் குடிபோதையில் உள்ளார்களா? வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள், அனுமதி சீட்டு உள்ளதா? என்றும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த தடை உத்தரவால் நேற்று பகலில் கன்னியாகுமரி – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலைகளில் பகல் வேளைகளில் டாரஸ் லாரிகள் இல்லை. இதனால் மார்த்தாண்டம் உள்ளிட்ட உள்ளிட்ட இடங்களில் போக்குவரத்து நெருக்கடியும் இல்லாமல் இருந்தது.
கொல்லங்கோடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேற்கு கடற்கரை சாலையில் காக்கவிளை சோதனை சாவடியில் நித்திரவிளை இன்ஸ்பெக்டர் இன்னோஸ் குமார் தலைமையில் கொல்லங்கோடு எஸ்.ஐ. வில்சன் மற்றும் சிறப்பு எஸ்.ஐ. பிரபா ஆகியோர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சூழால் சோதனை சாவடியில் கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில், எஸ்.ஐ. ஹரிகுமார் மற்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வில்லுக்குறியில் சோதனை
டாரஸ் லாரிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று மதியம் வில்லுக்குறி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இரணியல் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சிமெண்ட் இறக்கிவிட்டு வந்த 16 சிமெண்ட் டாரஸ் லாரிகளை தடுத்து நிறுத்தினர். சோதனைக்கு பின்னர் சிமெண்ட் லாரிகள் என்பதால் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும் போது, எஸ்.பி உத்தரவின் பேரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். கனிம வளம் ஏற்றி வரும் டாரஸ் லாரிகள் தடை விதிக்கப்பட்ட நேரங்களில் பயணித்தால் கடும் அபராதம் விதிக்கப்படும். முதல் நாள் என்பதாலும் சிமெண்ட் இறக்கிவிட்டு வந்த டாரஸ் லாரிகள் என்பதாலும் எச்சரித்து அனுப்பி வைத்துள்ளோம். விதி மீறல் மற்றும் தடை விதிக்கப்பட்ட நேரங்களில் அத்து மீறி நுழையும் டாரஸ் லாரிகளுக்கு அபராதம், பறிமுதல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றனர்.
772 வழக்குகள், ரூ.3.73 கோடி அபராதம்
குமரி மாவட்டத்தில் கடந்த 2023ம் ஆண்டில் போக்குவரத்து விதிகள் மீறி அதிக பாரம் ஏற்றி சென்றதாக 772 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மூன்று கோடியே 73 லட்சத்து 61 ஆயிரத்து 688 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஆண்டும் தொடக்கத்தில் இருந்து டாரஸ் லாரிகள் மீது அபராத விதிப்பு மற்றும் கைது நடவடிக்கைகள், வாகனங்கள் பறிமுதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
கேரளாவிற்கு திருப்பி அனுப்பப்பட்ட லாரிகள்
களியக்காவிளை: நேற்று காலை கேரளாவில் இருந்து குமரி மாவட்ட எல்லையான களியக்காவிளைக்கு வந்த கனரக லாரிகளை குமரி போலீசார் திருப்பி அனுப்பினர். மேலும் மாவட்டத்தின் கேரள எல்லை பகுதிகளின் வழியாக இயக்கப்படும் கனிம வள லாரிகளை கண்காணிக்கும் பணியில் அதிகளவு போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
The post குமரியில் அடுத்தடுத்து உயிர் பலிகள் எதிரொலி டாரஸ் லாரிகளுக்கு கட்டுப்பாடு அமல் appeared first on Dinakaran.