×

விழுப்புரம் அருகே 33 நன்னீர் ஆமைகள் பறிமுதல்

*ஆந்திர மாநில சிறுவர்கள் 4 பேர் கைது

விழுப்புரம் : நீர் நிலையில் 33 நன்னீர் ஆமைகளை எடுத்து சென்ற ஆந்திர மாநில சிறுவர்கள் 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
விழுப்புரம் பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களின் குடும்பத்தினர் 20 பேர் பூம் பூம் மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் சாலையோரங்களில் தங்கி வசித்து வருகின்றனர்.

இந்நிலையில், வளவனூர் அடுத்த கெங்கராம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த ஆந்திர மாநில தொழிலாளர்கள், அருகில் உள்ள நீர் நிலையில் நன்னீர் ஆமைகளை பிடித்துள்ளனர்.
இதை பார்த்த அப்பகுதியினர் விழுப்புரம் வனத்துறை அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வனச்சரகர் கமலக்கண்ணன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். செல்லும் வழியில் பானாம்பட்டு என்ற இடத்தில் 4 ஆந்திர மாநில சிறுவர்கள் வந்துகொண்டிருந்தனர். அவர்களை பிடித்து வனத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவர்களிடம் 33 நன்னீர் ஆமைகள் இருந்தது தெரியவந்தது.

இதை தொடர்ந்து நடத்திய விசாரணையில், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த 17 வயது மதிக்கதக்க சிறுவர்கள் 4 பேர், சமைத்து சாப்பிடுவதற்காக வனவிலங்கு பட்டியலில் உள்ள நன்னீர் ஆமைகளை பிடித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அவர்களிடமிருந்து 33 நன்னீர் ஆமைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குழந்தைகள் காப்பகத்தில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஆமைகள் மீண்டும் நீர் நிலை பகுதியில் விடப்பட்டது.

The post விழுப்புரம் அருகே 33 நன்னீர் ஆமைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Andhra ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...