×

ஐகோர்ட் கிளை உத்தரவின்படி டிரைவரின் உடல் இரு மத சடங்குகளுடன் நல்லடக்கம்

காரைக்குடி : காரைக்குடியில் உயிரிழந்த அரசு பஸ் டிரைவரின் உடல், ஐகோர்ட் கிளை உத்தரவின்படி இரு மத சடங்குகளுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.சிவகங்கை மாவட்டம், காரைக்குடியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (55). அரசு பஸ் டிரைவர். இவர் சாந்தி என்பவரை இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர்.

பின்னர் இஸ்லாமிய முறைப்படி சையது அலி பாத்திமா என்பவரை திருமணம் செய்து தனது பெயரை அன்வர் உசேன் என மாற்றி வாழ்ந்துள்ளார். கடந்த 17ம் தேதி பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் திடீர் என உயிரிழந்தார். இவரது உடலை இருதரப்பினரும், கேட்டதால் பிரச்னை ஏற்படவே நீதிமன்றத்தை நாடி உரிய முடிவு எடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதனையடுத்து உயிரிழந்த அன்வர் உசேன் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இருதரப்பினரும் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தனர். இதனை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அன்வர் உசேனின் உடலை முதலில் சாந்தி மற்றும் அவரது மகளிடம் ஒப்படைக்க வேண்டும். இந்து முறைப்படி சடங்குகளை செய்யலாம். பின்னர் இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தார். அதன்படி பாலசுப்பிரமணியன் என்ற அன்வர் உசேன் உடலுக்கு இந்து முறைப்படி காரைக்குடி அரசு மருத்துவமனை வளாகத்திலேயே சாந்தி மற்றும் அவரது மகள் நேற்று சடங்குகள் செய்தனர். பின்னர் உடல் ஜமாத்திடம் ஒப்படைக்கப்பட்டு இஸ்லாமிய முறைப்படி சடங்குகள் முடித்து அமனத் நகர் பள்ளிவாசலில் உள்ள கபர்ஸ்தானில் அடக்கம் செய்யப்பட்டது.

The post ஐகோர்ட் கிளை உத்தரவின்படி டிரைவரின் உடல் இரு மத சடங்குகளுடன் நல்லடக்கம் appeared first on Dinakaran.

Tags : iCourt branch ,Karaikudi ,Aycourt branch ,Balasubramanian ,Sivaganga District, ,Shanti ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...