வருசநாடு: வருசநாடு அருகே மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி மலைக்கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கு மேலாகி உள்ள நிலையில், எவ்வித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் சில இடங்களில் சேதமடைந்து, இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக மேற்கூரைகள் சேதமடைந்து அதிலிருந்து அவ்வப்போது சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுகின்றன. இதனால் பள்ளியின் மேற்கூரை இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதன் காரணமாக மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த அச்சத்துடன் உள்ளனர். மேலும் மழை பெய்யும்போது வகுப்பறைகளிள் நீர்க்கசிவு ஏற்படுகிறது. மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி, பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பெற்றோர்கள் மற்றும் கிராமமக்கள் கூறுகையில், ‘‘பள்ளி வகுப்பறை மேற்கூரை சேதமடைந்துள்ளதால், சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுகின்றன. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
The post வருசநாடு அருகே அரசு பள்ளி கட்டிடம் சேதம் சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.