செம்பருத்தி, உணவு, அழகு சாதனப் பொருட்கள், மருத்துவப் பொருட்கள் போன்றவை உற்பத்தி செய்யப் பயன்படுகிறது. மேலும், செம்பருத்திப் பூ இதழ்களிலிருந்து தயாரிக்கப்படும் தேநீர், ரத்த அழுத்தம், மன அழுத்தம், கொழுப்பு, உடல் எடை ஆகியவற்றைக் குறைக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புமிக்க செம்பருத்தியை பொதுமக்களிடம் கொண்டு செல்ல, செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில், ஒரு கோடி ரூபாய் செலவில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும். இனத்தூய்மையான, தரமான நடவுச் செடிகளை உரிய நேரத்தில் உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு நியாயமான விலையில் வழங்கவும், விவசாயிகளுக்கு மாதிரி செயல் விளக்கப் பண்ணையாகச் செயல்படவும், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம், நடுவக்குறிச்சி கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலப்பரப்பில் புதிய அரசு தோட்டக்கலைப் பண்ணை, ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
* 3 மாவட்டங்களில் மஞ்சள் மெருகூட்டும் இயந்திரம் ரூ.2.12 கோடிக்கு கொள்முதல்
நாட்டின் முக்கியமான மஞ்சள் சந்தைகளில் ஒன்று ஈரோடு. அறுவடைக்குப்பின் மஞ்சளைப் பதப்படுத்தி, மெருகேற்றம் செய்வதன் மூலம் மஞ்சளின் சேமிப்புக்காலமும் தரமும் மேம்படுத்தப்படுகிறது. எனவே, மஞ்சள் விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் பயன்பாட்டிற்காக மஞ்சளுக்கென 5 மெருகூட்டும் இயந்திரங்களும், 8 மஞ்சள் வேகவைக்கும் இயந்திரங்களும், ரூ.2 கோடியே 12 லட்சத்தில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் ஈரோடு, கள்ளக்குறிச்சி, தருமபுரி மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் அமைக்கப்பட உள்ளன. அதேபோல், உணவு தானியங்களின் ஈரப்பதம் சரியான அளவில் பராமரிக்கப்பட்டு, நீண்ட நாட்களுக்கு வீணாகாமல் சேமித்து வைக்க ஏதுவாக, திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், தேனி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களுக்கு, தானியங்களை உலர்த்துவதற்கான நடமாடும் உலர்த்திகள் ரூ.2 கோடியே 50 லட்சம் செலவில் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 50 ஆயிரம் மின் இணைப்புகள்
2022-2023ம் ஆண்டில் 116 லட்சத்து 91 ஆயிரம் மெட்ரிக் டன்னாக உணவு தானிய உற்பத்தி அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் கிடப்பிலிருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நடப்பாண்டிலும் மேலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
* சிறுதானிய மண்டலங்கள்
ஊட்டச்சத்து மிகுந்த சோளம், கம்பு, கேழ்வரகு போன்ற சிறுதானியங்கள் வரகு, பனிவரகு, குதிரைவாலி, சாமை, தினை போன்ற குறுதானியங்கள் ஆகியவற்றின் சாகுபடிப் பரப்பு, உற்பத்தி, உற்பத்தித்திறனை அதிகரிக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசால், 25 மாவட்டங்களைக் கொண்டு ஏற்கனவே இரண்டு சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2023-2024 முதல் 2027-2028 வரையிலான 5 ஆண்டுகளுக்கு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் இரண்டு மண்டலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் 2024-2025லும் ரூ.65.30 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
* பலா மதிப்பு கூட்டுதலுக்கான மையம் ரூ.16.13 கோடி நிதி ஒதுக்கீடு
பண்ருட்டியில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை ஏற்றுமதித் தரத்தில் தயாரித்து விற்பனை செய்திட ஏதுவாக, பலா மதிப்புக்கூட்டுதலுக்கான மையம் ரூ.16 கோடியே 13 லட்சம் மதிப்பீட்டில் ஒன்றிய, மாநில அரசு நிதியில் அமைக்கப்பட உள்ளது. அதேபோல், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்திட, விளைபொருட்களை தனியார் நிறுவனங்களுக்கு நிகராக மதிப்புக்கூட்டி திறம்பட சந்தைப்படுத்துவதற்கான பொது முத்திரை வடிவமைக்கப்பட உள்ளது. இதில் சிப்பம் கட்டுவதற்கும், முத்திரையிடுவதற்குமான பொதுக் கட்டமைப்பு வசதிகள் சென்னையிலும் கோவையிலும், ரூ.4 கோடியே 10 லட்சம் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட உள்ளன.
* மீன்வளர்ப்பு திட்டங்களுக்கு ரூ.4.60 கோடி மானியம்
உள்நாட்டு மீன்வளர்ப்போரை ஊக்குவித்து, உள்ளூர் சந்தைகளின் மீன் தேவையினை நிறைவு செய்திடும் வகையில், புதிதாக நன்னீர் மீன்வளர்ப்புக் குளங்கள் அமைத்தல், இடுபொருள் மானியம் வழங்குதல், உயிர்க்கூழ்ம முறையில் மீன்வளர்ப்பு, நீரினை மறுசுழற்சி செய்து மீன்வளர்ப்பு, மீன்தீவன ஆலை அமைத்தல் போன்ற திட்டங்களைச் செயல்படுத்திட, ரூ.4 கோடியே 60 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
* ரூ.110.59 கோடியில் வறட்சித் தணிப்பு சிறப்பு உதவி திட்டம்
பாசன வேளாண்மையினால் ஏற்படும் ஆதாயங்களை உணர்ந்து நிலத்தடி நீரினைப் பயன்படுத்தி விவசாயிகள் அதிக உற்பத்தி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு, வேளாண் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை, 23 லட்சத்து 51 ஆயிரம் இலவச மின் இணைப்புகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதற்குத் தேவையான கட்டணத் தொகையாக, ரூ.7,280 கோடியை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு அரசு வழங்கும். தர்மபுரி, திருப்பூர், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 7 மாவட்டங்களின் 55 வட்டங்களில் உள்ள 110 கிராமங்களில் வறட்சித் தணிப்பிற்கான சிறப்பு உதவித் திட்டம், 2024-25முதல், ரூ.110 கோடியே 59 லட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
* விளைபொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்க புத்தாக்க நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி மானியம்
2024-25ல் பண்ணை வழி வர்த்தகம் தீவிரமாகச் செயல்படுத்தப்பட்டு ரூ.60 கோடி மதிப்பிலான விவசாயிகளின் விளைபொருட்களுக்கு சிறந்த விலை கிடைக்க வழி வகை செய்யப்படும். மின்னணு மாற்றத்தகு கிடங்கு ரசீது முறை 150 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களிலுள்ள சேமிப்புக் கிடங்குகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-25ல், கூடுதலாக 100 சேமிப்புக் கிடங்குகளுக்கு, கிடங்கு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தின் அங்கீகாரம் பெறப்பட்டு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன்பெற வழிவகை செய்யப்படும். வேளாண்மை, வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் புத்தாக்க நிறுவனங்களைக் கண்டறிந்து, அவற்றின் நோக்கம், செயல்பாடு, வணிக திட்டத்தினை ஆய்வு செய்து, தகுதியுள்ள புத்தாக்க நிறுவனங்களுக்கு மானியம் அளித்து மேம்படுத்திட ரூ.10 கோடி மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 10 லட்சம் பனை விதைகள் நடப்படும்
தமிழ்நாட்டில் பனை சாகுபடியினை ஊக்குவிக்க, 2024-25ம் ஆண்டில், 10 லட்சம் பனை விதைகள் தோட்டக்கலைத் துறையின் மூலம் நடப்படும். மேலும், பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு 200 பனைத்தொழிலாளர்களுக்கு, தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு, பிற மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிப்பதற்கான பயிற்சிகளும், 100 மகளிருக்கு பனை ஓலைப்பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியும், பயிற்சி பெற்ற அனைவருக்கும் உரிய கருவிகளும் வழங்கப்படும். இதற்கென ரூ.1 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* ஏற்றுமதியாளர்களாக்கும் அப்பீடா பயிற்சிக்கு 100 விவசாயிகள் தேர்வு
மா, தென்னை, சிறுதானியங்கள், முருங்கை, மஞ்சள், சின்ன வெங்காயம், வெள்ளரி ஆகியவற்றைப் பயிரிடும், அப்பீடா பயிற்சி பெற்ற 100 விவசாயிகளைத் தேர்வு செய்து, அவர்களை நூற்றுக்கு நூறு ஏற்றுமதியாளர்களாக மாற்றுவதற்கான உரிய சான்றிதழ்களைப் பெற்றுத் தரும் வகையில், ஒரு நபருக்கு ரூ.15,000 வீதம் ரூ.15 லட்சம் மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். வர்த்தகம் மேம்பட விவசாயிகளின் விளைபொருட்கள் இருப்பையும், வர்த்தகர்களின் தேவையையும் இணைத்து சமூக வலைதளக் குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களுடன் இணைக்கப்படும். அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல், தரம் பிரித்தல், மதிப்புக்கூட்டுதல், ஏற்றுமதி வழிமுறைகள் போன்றவை குறித்து ஒவ்வொரு வட்டாரத்திலும் இரண்டு கிராமங்கள் வீதம் மாதம் ஒன்றிற்கு, 770 தீவிர விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு இரண்டாண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ஏற்படுத்தப்படும்.
* ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வேளாண் விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு
புவிசார் குறியீடு பெறப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்துவதால் அவற்றின் தேவை, ஏற்றுமதி அளவு அதிகரிக்கும். எனவே, நமது மண்ணின் அடையாளங்களான மாநிலத்தின் தனித்துவமான 25 வேளாண் விளைபொருட்களுக்குப் புவிசார் குறியீடு பெற கடந்த மூன்று ஆண்டுகளில், விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல், 2024-2025ல் சத்தியமங்கலம் செவ்வாழை – ஈரோடு, கொல்லிமலை மிளகு – நாமக்கல், மீனம்பூர் சீரக சம்பா – ராணிப்பேட்டை, ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை – திண்டுக்கல், உரிகம்புளி – கிருஷ்ணகிரி, புவனகிரி மிதி பாகற்காய் – கடலூர், செஞ்சோளம் – சேலம், கரூர், திருநெல்வேலி அவுரி இலை – திருநெல்வேலி, ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை – தேனி, செங்காந்தள் கண்வலி விதை – (கரூர், திண்டுக்கல், திருப்பூர்) ஆகிய 10 பொருட்களுக்குப் புவிசார் குறியீடு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெறப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: செங்கல்பட்டு, ஆத்தூரில் செம்பருத்தி நடவுச்செடிகள் உற்பத்தி மையம் appeared first on Dinakaran.