×

2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேவை அதிகரிப்பு மா, பலா, வாழைக்கு சிறப்புத்திட்டம்; வேளாண்மை பட்ஜெட்டில் தகவல்

வேளாண்மை பட்ஜெட்டில் கூறியிருப்பதாவது: முக்கனிகளில் முதற்கனியான ’மா’ வில், தென்னாட்டு ரகங்களான பாதிரி, நீலம், பெங்களூரா, ருமானி, மல்கோவா, பங்கனப்பள்ளி போன்ற விருப்பத்திற்குரிய ரகங்களைக் கொண்டு 4,380 ஏக்கரிலும், ஏற்றுமதிக்கேற்ற ரகங்களான இமாம் பசந்த், இரத்தினகிரி அல்போன்ஸோ, சிந்து போன்ற இரகங்களைக் கொண்டு புதிதாக 250 ஏக்கரிலும் மாந்தோப்புகள் உருவாக்கப்படும். நன்னெறி வேளாண் நடைமுறை, உற்பத்தி முதல் விற்பனை வரை ஒவ்வொரு நிலையிலும் ஏற்றுமதிக்குரிய வகையில் விவசாயிகளுக்குத் தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும். 2024-2025ம் ஆண்டில் ‘மா’ விற்கான சிறப்புத்திட்டம், 27 கோடியே 48 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் வாழைக்கான தேவை அதிகரித்துள்ளதால் வாழை உற்பத்தியை அதிகரிக்க, 5,220 ஏக்கரில் வாழை பரப்பு விரிவாக்கம் செய்யப்படும். 2024-2025ம் ஆண்டில் வாழைக்கான சிறப்புத்திட்டம், 12 கோடியே 73 லட்சம் ரூபாய் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும். 2024-2025ம் ஆண்டிலும், பலாவில் உள்ளூர் ரகங்கள் 620 ஏக்கரிலும், புதிய ரகங்கள் 620 ஏக்கரிலும் பரப்பு விரிவாக்கம் செய்யவும், பலா விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த உரம், பூச்சி மேலாண்மைக்கான இடுபொருட்கள், பயிற்சிகள் வழங்கவும், பலா பதப்படுத்தும் கூடங்கள் அமைக்கவும், ஒரு கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* ஊட்டி ரோஜா பூங்காவில் புதிய ரோஜா ரகங்கள் அறிமுகம்
உதகையில் அரசு ரோஜா பூங்காவில் பெரிய, சிறிய வகை ரோஜாக்கள், கொடி ரோஜா போன்ற 4,201 வகைகளை உள்ளடக்கிய 32,000 ரோஜாச் செடிகள் உள்ளன. இந்த உலகப் புகழ்பெற்ற அரசு ரோஜா பூங்காவில் ஆண்டுக்கு சராசரியாக 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிந்து அனைத்து வகையான ரோஜாக்களையும் கண்டு மகிழ்கின்றனர். இப்பூங்காவின் ரோஜா தொகுப்பைச் செறிவூட்டும் வகையில், முதற்கட்டமாக, 100 புதிய ரக ரோஜா வகைகள் நடவு செய்யப்பட்டு சுற்றுலாப் பயணிகளை மேலும் கவரும் வண்ணம் இப்பூங்கா மேம்படுத்தப்படும். பாரம்பரிய மருத்துவத்தின் மகத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளதால், மூலிகைப் பயிர்களின் பயன்பாடு தற்போது அதிகரித்துள்ள சூழ்நிலையில், மூலிகைப் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், மூலிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உதவவும், கண்வலிக் கிழங்கு (செங்காந்தள்), சென்னா, நித்தியகல்யாணி, மருந்துக்கூர்க்கன் போன்ற மூலிகைப் பயிர்களை 1,680 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்வதற்கு, 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடியில் கலைஞர் வேளாண் வளர்ச்சி திட்டம்
ஒவ்வொரு சிற்றூரும் தன்னிறைவு பெற்று முன்மாதிரியாகத் திகழவேண்டும் என்ற நோக்கில், முதன்மைத் தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்தி, நிகர சாகுபடிப் பரப்பை அதிகரித்திட தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றி விவசாயிகளுக்குத் தந்திட “கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்” எனும் திட்டம் 2021-2022லிருந்து ஐந்து ஆண்டுகளுக்கு 12 ஆயிரத்து 525 கிராம ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025லும், இத்திட்டம், தேர்வு செய்யப்பட்ட 2,482 கிராம ஊராட்சிகளில், ரூ.200 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

The post 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல்: உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் தேவை அதிகரிப்பு மா, பலா, வாழைக்கு சிறப்புத்திட்டம்; வேளாண்மை பட்ஜெட்டில் தகவல் appeared first on Dinakaran.

Tags : Pathiri ,Neelam ,Bengaluru ,Rumani ,Malgoa ,Panganapalli ,Imam Basant ,Alphonso ,Sindhu ,
× RELATED தர்மபுரியில் செந்தூரா மாம்பழம் வரத்து அதிகரிப்பு கிலோ ₹80க்கு விற்பனை