×

2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு

* பயிர் காப்பீட்டுக்கு ரூ.1,775 கோடி ஒதுக்கீடு
* வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்கு ரூ.10,000 கோடி
* ரூ.206 கோடியில் மண்ணுயிர் காப்போம் புதிய திட்டம்
* கரும்பு டன்னுக்கு ரூ.215 கூடுதல் ஊக்கத்தொகை

சென்னை: தமிழக அரசின் 2024-2025ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். அப்போது, பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், பயிர் காப்பீட்டுக்கு ரூ.1,775 கோடி, வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்கு ரூ.10,000 கோடி, புதிய குளங்கள், கிணறு அமைக்க ரூ.7,000 கோடி, கரும்பு டன்னுக்கு ரூ.215 கூடுதல் ஊக்கத்தொகை என வேளாண் சார்ந்த துறைக்கு ரூ.42,282 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் மண்ணுயிர் காப்போம் என்ற புதிய திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில், நேற்று முன்தினம் 2024-2025ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். ‘‘தடைகளை தாண்டி வளர்ச்சியை நோக்கி என்ற பெயரில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் அரசு பள்ளியில் படித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் என்ற திட்டத்தில் மாதம் ரூ.1000 உள்ளிட்ட பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெற்றன. கடந்த 2021ம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபின், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நேற்று காலை 10 மணிக்கு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

அதில் கூறி இருப்பதாவது:
* தமிழ்நாட்டில் வேளாண்மையில் தற்போதுள்ள சவால்களை சாதனைகளாக மாற்றி, அதன்மூலம் விவசாயிகளின் நலனை பேணிக் காத்திட, பல அரிய திட்டங்கள் வேளாண்மை-உழவர் நலத்துறையால் கடந்த 3 ஆண்டுகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. முதல்வரின், வேளாண்மைக்கான தொலை நோக்கு திட்டங்களைச் செயல்படுத்தியதன் காரணமாக 2020-21ல் 152 லட்சம் ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2022-23ல் 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
* வேளாண் தொழிலை மேற்கொள்ள இளைஞர்களிடம் ஆர்வம் ஏற்படுத்துவது மிகவும் அவசியம். இளைஞர்கள் தான், எந்த ஒரு நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும் முதுகெலும்பானவர்கள். வேளாண் சார்ந்த தொழில்களின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும் என்பதால், 2021-22 முதல் 268 வேளாண் பட்டதாரிகள் தேர்வு செய்யப்பட்டு தலா ஒரு லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, அக்ரி கிளினிக் உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை தொடங்கி நடத்தி வேளாண்மைக்கு வலு சேர்க்கப்பட்டு வருகிறது.
* வேளாண் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட நம்முடைய அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை எடுத்துள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குமேல் சன்ன ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு 107 ரூபாயும், சாதாரண ரகத்திற்கு குவிண்டால் ஒன்றிற்கு 82 ரூபாயும் ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டு, விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு, 45 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. பயிறு வகைகள், கொப்பரை தேங்காய் ஆகியவையும் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படுவதால் விலை வீழ்ச்சியில் இருந்து விவசாயிகள் பாதுகாக்கப்படுகின்றனர்.
* இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்கள் மீண்டு வரும் வகையில் பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில், 2023 டிசம்பர் 17, 18ம் தேதிகளில் பெய்த கனமழையால் அதிகம் பாதிப்படைந்த தூத்துக்குடி மாவட்டத்தில், பயிர் சேதத்திற்காக ரூ.14 கோடியே 55 லட்சம், 9,988 விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையாக உடனடியாக வழங்கப்பட்டது. 2024-2025ல் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.1,775 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கரும்பு சாகுபடி பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், கரும்பு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறும் வகையிலும், 2023-2024-அரவை பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையைவிட, முன் எப்போதும் இல்லாத அளவில் டன் ஒன்றுக்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்கென, ரூ.250 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம், ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும்.
* விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைத்திட ஏதுவாக உழவர் சந்தைகள், மின்னணு சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் ஆகியவை செயல்படுகின்றன. இதனால், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நல்ல விலை அளிக்கப்பட்டு வருகிறது.
* தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.380 கோடியே 40 லட்சம் நிவாரணத் தொகை, 4 லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டுள்ளது.
* தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் மழை குறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட பெருமழை போன்ற இயற்கை பேரிடர்களால் ஏற்பட்ட பயிர் சேதத்திற்கு ரூ.208 கோடியே 20 லட்சம் நிவாரணத்தொகை 2 லட்சத்து 74 ஆயிரம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
* 2022-2023ம் நிதியாண்டில், இதுவரை இல்லாத அளவிற்கு ரூ.13,442 கோடி பயிர்க்கடனாக 17 லட்சத்து 44 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2023-2024ல் ரூ.16,500 கோடி பயிர்க்கடன் என்ற உயரிய இலக்கினை நிர்ணயித்து இதுவரை ரூ.13,600 கோடி பயிர்க்கடனாக 16 லட்சத்து 19 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2024-2025க்கு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* 2023-2024ல் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு பராமரிப்பு, நடைமுறை முதலீட்டு கடன் இலக்காக, ரூ.2,300 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.1,900 கோடி வழங்கப்பட்டுள்ளது. 2024-2025க்கு, பயிர்க்கடன் வட்டி மானியத்திற்கென ரூ.700 கோடியும், ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டு கடன் வட்டி மானியத்திற்கென ரூ.200 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* 2,609 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, 4,757 திட்டங்களுக்காக ரூ.457 கோடி ஒப்பளிக்கப்பட்டு இதுவரை ரூ.341 கோடி கடனாக விடுவிக்கப்பட்டுள்ளது.
* நெல் அரவை திறனை மேலும் அதிகரித்திட, 6 புதிய நவீன அரிசி ஆலைகள் தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தப்படவுள்ளன. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொணரப்பட்ட நெல்மணிகளை இயற்கையின் இடர்ப்பாடுகளில் இருந்து காத்திட, நெல் சேமிப்பு கட்டமைப்புகள் 18 இடங்களில் ரூ.238 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளன. மேலும், 250 மெட்ரிக் டன் கொள்ளளவிலான 55 எண்ணிக்கையிலான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
* 2024-2025ல், உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் உணவு மானியத்திற்கு ரூ.10,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசின் நெல் கொள்முதல் ஊக்கத்தொகை வழங்குவதற்கு என ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
* காவேரி, வெண்ணாறு, கல்லணை வடிநில பகுதிகளில் உள்ள தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், திருச்சி ஆகிய 7 மாவட்டங்களில், ஒரு லட்சத்து 57 ஆயிரம் ஏக்கர் பயன் பெறும் வகையில், 2,235 கிலோ மீட்டர் நீளத்திற்கு “சி”, “டி” பிரிவு வாய்க்கால்களை தூர்வாரும் பணிகள் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்.
* காவிரி டெல்டா பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் முன் 5,338 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.110 கோடி செலவில் 919 பணிகள் மேற்கொள்ளப்படும்.
* 2024-2025ல் பண்ணைக்குட்டைகள், நீர் செறிவூட்டு தண்டுகள், கசிவு நீர் குட்டை, செறிவூட்டு கிணறுகள், புதிய குளங்கள், மண் வரப்பு, கல் வரப்பு போன்ற இரண்டு லட்சம் பணிகள் ரூ.7,000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
* 2024-2025ல் வேளாண்மை மற்றும் அதன் தொடர்புடைய துறைகளான கால்நடை பராமரிப்பு துறை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, உணவுத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, பட்டு வளர்ச்சித்துறை ஆகியவற்றின் மானிய கோரிக்கைகளின் கீழ் ரூ.42 ஆயிரத்து 281 கோடியே 87 லட்சத்து 84 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

* 2 மணி நேரம் வேளாண் பட்ஜெட் படித்தார் அமைச்சர்
அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை படிக்க தொடங்கி, 11.57 மணிக்கு 85 பக்க உரையை படித்து முடித்தார். வேளாண் பட்ஜெட் என்பதால் அமைச்சர் பச்சை கலர் துண்டு போட்டு வந்தார். முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நவதானியங்களால் செய்யப்பட்ட மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றார். முதல்வரும், வேளாண் அமைச்சரும் காலை 9.57 மணிக்கு சட்டப்பேரவைக்கு ஒன்றாக வந்தார். அப்போது திமுக உள்ளிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் மேஜையை தட்டி வரவேற்றனர். அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் படிக்கும் 4வது வேளாண் பட்ஜெட் இதுவாகும்.

The post 2024-2025ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு ரூ.16,500 கோடி பயிர்க்கடன்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,M. R. K. ,Chennai ,Government of Tamil Nadu ,M. R. K. Paneer Selvam ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்