×

ரூ.206 கோடி நிதியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

சென்னை: ‘முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம், ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2024-2025ம் ஆண்டில் 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதனால், தமிழ்நாட்டில் உள்ள 2 லட்சம் விவசாயிகள் பயனடைவர்.
* மாட்டுச் சாணத்தோடு, வேளாண் கழிவுகளையும் மக்கச் செய்து மண்புழு உரம் தயாரித்து மண்வளத்தை மேம்படுத்திட, ஒரு விவசாயிக்கு இரண்டு மண்புழு உரப்படுக்கைகள் வீதம் 10,000 விவசாயிகளுக்கு வழங்கிட ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மேலும், நிரந்தர மண்புழு உரத் தொட்டிகள் அமைத்து, தொடர்ந்து மண்புழு உரம் தயாரிக்க ஏதுவாக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் மண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு, சமச்சீர் உரப் பரிந்துரை, ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். ரசாயன உரங்களின் பயன்பாட்டினை குறைத்து மண்ணின் வளம் காக்க, ரூ.6 கோடியே 27 லட்சம் ஒன்றிய, மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* 37,500 ஏக்கர் களர் நிலங்களை சீர்ப்படுத்த ரூ.7 கோடியே 50 லட்சமும், 37,500 ஏக்கர் அமில நிலங்களை சீர்ப்படுத்த ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பாரம்பரிய நெல் இரகங்களான அறுபதாம் குறுவை, பூங்கார், தூயமல்லி, சீரகசம்பா, மாப்பிள்ளை சம்பா, சீவன் சம்பா, கருப்புக்கவுனி, போன்றவற்றின் விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு 10,000 ஏக்கரில் சாகுபடி செய்யும் வகையில் 200 மெட்ரிக் டன் விதைகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும். இதற்கென, ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.
* சேலம், கரூர் மாவட்டங்களில் தலைவிரிச்சான் சோளம், வெள்ளை சோளம், இருங்கு சோளம், செஞ்சோளமும், தூத்துக்குடி மாவட்டத்தில் காக்காச்சோளமும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் வெண்சுருட்டை கேழ்வரகு, கருஞ்சுருட்டை கேழ்வரகு, கரிக்கட்டை கேழ்வரகு, பூவாடன் கேழ்வரகு, குருவிக்காரன் கம்பு, காட்டுக்கம்பு, தட்டை வரகு, பெரும்சாமை, சடை சாமை, சிட்டன் சாமை, கருஞ்சிட்டன் சாமை, நாட்டுத் துவரை, மலைத்துவரை ஆகியவற்றையும், திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில், நாட்டு உளுந்து, கொடி உளுந்து ஆகிய ரகங்களின் விதைகளையும் கண்டறிந்து சேகரித்து, அரசு மாநில விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு பாரம்பரிய இரகங்கள் பாதுகாக்கப்படும்.
* உயிர்ம வேளாண்மைக்கான திட்டங்கள், சான்றளிப்பு முறைகள், நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு, இயற்கை இடுபொருட்கள் தயாரிப்பிற்கான பயிற்சிகள், உயிர்ம வேளாண் பொருட்களைச் சந்தைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள், அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்பதற்காக, வட்டாரத்திற்கு ஒரு கிராமம் தேர்ந்தெடுக்கப்பட்டு, உயிர்ம வேளாண்மைக்கான மாதிரிப் பண்ணை உருவாக்கப்பட்டு இதர விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இதற்கென 38 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
* தரமான மரக்கன்றுகள் உற்பத்தி செய்திடவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் நாற்றங்கால்களை வலுப்படுத்துவதற்காகவும் சிறிய, பெரிய, உயர் தொழில்நுட்ப (ஹை-டெக்) நாற்றங்கால்கள் அமைப்பதற்கு வேளாண்காடுகள் திட்டத்திற்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கறவை மாடுகள், ஆடுகள் வளர்த்தல், பழ மரங்கள், தேனீ வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் போன்ற 14,000 ஒருங்கிணைந்த பண்ணைய தொகுப்புகள் அமைத்திட ரூ.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மானாவாரி நிலங்களில் விவசாயிகள் லாபகரமான பயிர் சாகுபடி மேற்கொள்வதற்கு ஏதுவாக, உழவு மேற்கொள்ளவும், சிறுதானியங்கள், பயறுவகைகள், எண்ணெய்வித்துக்கள் பயிரிட விதைகளும் வழங்கப்படும். மூன்று இலட்சம் ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.36 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* உழவர்சந்தை போன்று விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள் ரூ.5 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
* நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவல்ல சீவன் சம்பா போன்ற மருத்துவ குணம் கொண்ட பாரம்பரிய நெல் ரகங்கள், 2024-2025ம் ஆண்டில் 1,000 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யும் வகையில் விதை விநியோகம் செய்யப்படும். மக்களின் உடல் நலத்தில் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில், ரூ.3 கோடியே 60 லட்சம் ஒதுக்கீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும்.

The post ரூ.206 கோடி நிதியில் முதலமைச்சரின் மண்ணுயிர் காப்போம் திட்டம்: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kathu ,Chief Minister ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...