×

காஷ்மீரில் ரூ.32000 கோடி வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ரூ.32ஆயிரம்கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீருக்கு பிரதமர் மோடி நேற்று அரசு முறை பயணம் மேற்கொண்டார். இங்கு நடந்த விழாவில் கல்வி, ரயில்வே, விமான போக்குவரத்து மற்றும் சாலை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் தொடர்புடைய சுமார் ரூ.32000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். ஜம்முவில் முதல் மின்சார ரயில் மற்றும் சங்கல்டன்-பாரமுல்லா நிலையங்களுக்கு இடையேயான ரயில் சேவையையும் பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து நாடு முழுவதும் ரூ.13ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களும் இதில் அடங்கும். ஐஐஎம் ஜம்மு, ஐஐஎம் புத்தகயா, ஐஐஎம் விசாகப்பட்டினம் மட்டுமின்றி, கேந்திரா வித்யாலயாக்களுக்கு 20 புதிய கட்டிடங்கள், 13புதிய ஜவகர் நவோதயா வித்யாலயா கட்டிடங்களை பிரதமர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து பிரதமர் 1500 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அரசின் திட்டங்களினால் பயனடைந்தவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

இதன் பின்னர் நடந்த பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, ஜம்முவில் முதல் முறையாக மக்களின் வீட்டுவாசலை அரசு அடைந்துள்ளது. இது தான் மோடியின் உத்தரவாதம், இது தொடரும். ஜம்மு காஷ்மீரின் அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கொண்டுவருவதற்கு370வது சட்டப்பிரிவு முக்கிய தடையாக இருந்தது. அதனை பாஜ அரசு ரத்து செய்துவிட்டது. ஒரு குடும்பத்தின் நலனை மட்டுமே முதன்மையாக கொண்ட அரசினால் சாமானியர்களின் நலனை பற்றி சிந்திக்கமுடியாது. ஜம்மு காஷ்மீர் வாரிசு அரசியலில் இருந்து விடுபட்டுள்ளதை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். வளர்ந்த இந்தியா என்றால் வளர்ந்த ஜம்மு காஷ்மீர் என்று பொருள். வளர்ந்து வரும் ஜம்மு காஷ்மீர் குறித்து உலகம் முழுவதும் மிகுந்த உற்சாகம் உள்ளது” என்றார்.

* நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்க பாதை

ஜம்மு காஷ்மீரின் உதம்பூர்-நகர்-பாரமுல்லா இணைப்பில் நாட்டின் மிக நீளமான ரயில் சுரங்கபாதையை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். இந்த ரயில் பாதையானது 12.77கி.மீ. நீளம் கொண்டது. கடந்த 2010ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி நிறைவடைய 14 ஆண்டுகள் ஆனது. அவசரகாலங்களில் பயணிகள் தப்புவதற்கு ஏதுவாக சுரங்க ரயில் பாதைக்கு இணையாக மற்றொரு சுரங்க பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையில் ரயில் சேவையை பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

The post காஷ்மீரில் ரூ.32000 கோடி வளர்ச்சி திட்டங்கள்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Modi ,Jammu and Kashmir ,Jammu and ,Kashmir ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…