×

வேளாண் பட்ஜெட்; தலைவர்கள் கருத்து

சென்னை: வேளாண் நிதிநிலை அறிக்கைக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வ பெருந்தகை: ஒன்றிய அரசு எவ்வளவு தான் வஞ்சித்தாலும், நிதியை தராவிட்டாலும் சிறப்பான வேளாண் பட்ஜெட் தமிழகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் வரவேற்கும் பட்ஜெட். கொப்பரை தேங்காய்க்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: மண்வளத்தைப் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கும் விதமான உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து, ‘மண்ணுயிர் காப்போம் திட்டம்’ என்ற புதிய திட்டம் 22 இனங்களுடன் செயல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு விவசாயிகளை மகிழ்விக்கும். அறிவிப்புகள் அனைத்தும் வேளாண் துறையின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.
எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி (அதிமுக): குறுவை சாகுபடியை வருங்காலத்திலாவது பேரிடர் காலத்தில் இருந்து விவசாயிகளை காக்க பயிர் காப்பீட்டில் சேர்க்க வேண்டும். தண்ணீர் இல்லாததால் சம்பா, தாளடி பருவ நடவு செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகாரிகளை கொண்டு ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். மேகதாது பிரச்சினை குறித்து எதுவும் பேசவில்லை. கோதாவரி-காவிரி இணைப்பு குறித்தும் அறிவிப்பு இல்லை.
பாஜ எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்: ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது நம்முடைய முதலமைச்சரும் இதை வலியுறுத்தி இருக்கிறார். எனவே ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: இந்த பட்ஜெட்டில் உள்ள அறிவிப்புகளை முறையாக, முழுமையாக செயல்பாட்டுக்கு கொண்டுவந்து விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன்: வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை அட்டை பெற்றுள்ள தொழிலாளர் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 150 நாள் வேலை வழங்கும் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. பேரிடர் காலங்களில் பேரிழப்புகளை சந்திக்கும் விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்ட உதவி முழுமையாக கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். இது தொடர்பாக தனியார் காப்பீட்டு நிறுவனங்களை தவிர்த்து பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். பரந்துபட்ட பிரிவினரின் கருத்துக்களையும், தேவைகளையும் கேட்டறிந்து ஆக்கப்பூர்வமான திட்டங்களுடன் இலக்கிய சுவையுடன் பட்ஜெட் அமைந்துள்ளது.

The post வேளாண் பட்ஜெட்; தலைவர்கள் கருத்து appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Tamil Nadu Congress Party ,President ,Selva Perundagai ,Union government ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED வெயிலின் தாக்கத்தால் மின்சார தேவை...