×

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது: தேர்தல் அதிகாரி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது என்றும் தேர்தல் அதிகாரி குற்றவாளி என்றும் உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை இன்று மதியம் உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியது. மேயர் தேர்தலில் செல்லாது என அறிவிக்கப்பட்ட 8 வாக்குசீட்டுகளை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பதிவான 8 வாக்குசீட்டுகளையும் ஆம்ஆத்மி மேயர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் பதிவாகியுள்ளது என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேயர் தேர்தலில் செல்லாத வாக்குசீட்டு என குறிப்பிட்டதாக கூறிய வாக்குசீட்டு எங்கே என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். மேயர் தேர்தலில் பதிவான ஒட்டுமொத்த வாக்குகளையும் எண்ணுவதற்கு உத்தரவிட உள்ளோம் என்று தேர்தல் அதிகாரி அணியிடம் உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி சரமாரி கேள்வி கேட்டுள்ளார். மேயர் தேர்தல் நடத்திய அதிகாரி மீது கடும் நடவடிக்கை எடுக்க நீதிபதியிடம் மனுதாரர் வலியுறுத்தியுள்ளார்.

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான யூனியன் பிரதேசம் சண்டிகரரின் மேயர் தேர்தல் இந்த மாதம் முதல் வாரத்தில் நடந்தது. அதில் பாஜ மேயர் வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றதாகவும், எட்டு வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் அறிவித்தார்.

திட்டமிட்டு வாக்குச்சீட்டுகளில் சில திருத்தம் செய்து வாக்குச்சீட்டு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்ததாக கூறி அதற்கான வீடியோவை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம், தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் (தோற்கடிக்கப்பட்ட மேயர் வேட்பாளர் ) தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 5ம் தேதி முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது என்பது ஜனநாயக படுகொலை என்று கடும் கண்டனம் தெரிவித்து விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது ஒரு தீவிரமானது என்பதால் தேர்தல் நடத்திய அதிகாரியிடம் பல முக்கிய கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. ஒருவேளை அவர் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தால் நிச்சயம் வழக்கு பதிவு உட்பட கடுமையான நடவடிக்கைகள் அவர் மீது எடுக்கப்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி,” விசாரணைக்காக நேரில் ஆஜராகி இருந்த தேர்தல் அதிகாரி அனில் மாஷிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

அதில், “வாக்கு சீட்டுகளில் எதற்காக நீங்கள் எழுதினீர்கள். அதற்கான காரணம் என்ன. அவ்வாறு செய்வது என்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று அதிகாரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாதா?. குறிப்பாக வாக்கு சீட்டுகளில் எக்ஸ் போன்ற குறியீட்டை எதற்காக போட்டீர்கள். அதனை நாங்கள் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பார்த்துள்ளோம். அதுபோன்று செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி இதுபோன்று நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தில் ஒருபோதும் ஏற்கத்தக்க ஒன்றாக இருக்காதே என காட்டமாக கேட்டார்.

இதையடுத்து அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி அனில் மாஷி சில வாக்கு சீட்டுகள் சிதைந்த வகையில் இருந்தது. அதனால் அவற்றை தனியாக பிரித்து வைப்பதற்காக அதில் எக்ஸ் போன்று குறியிட்டேன். குறிப்பாக நான் இருந்த அறையில் ஏராளமான கேமராக்கள் இருந்தது. அதனை நான் சாதாரனமாக தான் பார்த்தேன் என்று கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி அப்படியென்றால் வாக்கு சீட்டில் எக்ஸ் குறியை போட்டதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் தானே? என்று கேட்டார். அதற்கு ஆம் என்று தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி,” ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் சட்ட விதி 11ன் படி வாக்குச் சீட்டுகளில் கையெழுத்து மட்டும் தான் போட முடியுமே தவிர, இதுப்போன்று குறியீடுகளை எழுத முடியாது. நீங்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது. குறிப்பாக வாக்குச்சீட்டுகளை தனியாக பிரித்து பார்ப்பதற்காக தான் அவ்வாறு குறியிட்டேன் என தேர்தல் அதிகாரியான நீங்கள் கூறியுள்ளது முறைகேட்டில் ஈடுபட்டதை தெளிவுப்படுத்தி காட்டுகிறது.

உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அனைத்து வாக்கு சீட்டுகள் தொடர்பான விவரங்கள், வாக்குச்சீட்டுகள், அதுசார்ந்த முழுமையான வீடியோ பதிவுகள் அனைத்தையும் இன்று பிற்பகல் 2 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. மேலும் இதுபோன்ற விவகாரங்களில் குதிரை பேரம் நடப்பது என்பது உச்ச நீதிமன்றத்திற்கு அதிகப்படியான வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது’’ என தலைமை நீதிபதி தெரிவித்தார்.

இந்நிலையில் தனது அதிகார வரம்பை மீறி தேர்தல் நடத்தும் அதிகாரி தவறு செய்துள்ளார் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி குற்றவாளி என உச்சநீதிமன்றம் அதிரடியாக கூறியுள்ளது. சண்டிகர் மேயர் தேர்தலில் ஆம், ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு பதிவான வாக்குகளை செல்லாததாக தேர்தல் அதிகாரி மாற்றி உள்ளார். அதனால் சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்தது செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

சண்டிகர் மேயர் தேர்தலில் 8 வாக்குசீட்டுகளை செல்லாது என அறிவிக்க எந்த முகாந்திரமும் இல்லை. தேர்தல் அதிகாரி செய்த தில்லுமுல்லு நடவடிக்கைக்காக ஒட்டுமொத்த தேரர்தலையை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளருக்கு ஆதரவா பதிவான 8 வாக்குகளை வேண்டுமென்று செல்லாது என தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார். இதனால் சண்டிகர் மேயர் தேர்தல் ஆம்ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றி பெற்றதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.

The post சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக வெற்றி செல்லாது: தேர்தல் அதிகாரி குற்றவாளி: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : BJP ,Chandigarh ,Supreme Court ,Delhi ,Chandigarh mayoral election ,Dinakaran ,
× RELATED கெஜ்ரிவால் மேற்கொள்ளும் தேர்தல்...