×

ஞானத்தையும் பக்தியையும் பெருகச் செய்வாள் லலிதாம்பிகை

நாம் தொடர்ச்சியாக லலிதா சஹஸ்ரநாமத்தில் இதற்கு முந்தைய நாமத்தில் அம்பிகையின் ஸ்தனங்கள் என்கிற திரு மார்புகளை குறித்து பார்த்தோம். அதன் தத்துவார்த்தத்தையும் பார்த்தோம். நாப்யாலவால ரோமாலி லதாபல குசத்வயீ… என்கிற இந்த நாமமானது ஸ்தனங்களுடைய வர்ணனையும் ஸ்தனங்களுக்கு கீழே இருக்கக்கூடிய அம்பிகையினுடைய நாபி பிரதேசத்தையும் வர்ணிக்கின்றது. இப்படி நாபி என்கிற தொப்புள் பகுதியையும், ஸ்தனங்களையும் சேர்த்து ஒரே நாமாவில் சொல்கிறார்கள். மிகவும் சூட்சுமமான நாமம். இந்த நாமத்தை பிரித்துச் சொல்ல வேண்டுமெனில்… நாபி ஆலவால ரோம அலி லதா பல குசத்வயீ… என்று சொல்ல வேண்டும். நாம் புரிந்துகொள்வதற்காகத்தான் பிரித்துச் சொல்கிறோமே தவிர, சேர்த்துச் சொல்லித்தான் பழக வேண்டும். இந்த நாமத்தின் நேரடியான பொருளைப் பார்ப்போமா? இதற்கு முந்தைய நாமத்தில் அம்பிகையின் திருமார்புகளை மட்டுமே தனியே பார்த்தோம். இப்போது, இந்த நாமத்தில் அதோடு நிறுத்தாமல் இன்னும் ஆழமாக வேறொரு விஷயமும் சொல்கிறார்கள். அதாவது அம்பிகையினுடைய நாபியிலிருந்து (தொப்புள்) மெல்லியதாக ரோம வரிசையான மேலே கொடிபோல எழுந்து வருகின்றது. சட்டென்று கண்ணுக்குத் தெரியாத ரோம வரிசை அது.

அந்த ரோம வரிசையானது அப்படியே மேலே எழுந்து அம்பிகையினுடைய நெஞ்சுப் பகுதியில் இரண்டு மெல்லிய கொடிகளாகப் பிரிந்து இரண்டு ஸ்தனங் களிலும் சென்று இணைகின்றது. வசின்யாதி வாக் தேவதைகள் இதை ஒரு உவமையோடு தொடர்புபடுத்துகிறார்கள். ஒரு கொடி வளருகிறது. அந்தக் கொடியானது மேல் நோக்கி வளர்ந்து, அந்தக் கொடியின் நுனியில் இரண்டு பழங்கள் பழுத்திருக்கின்றதன. அந்தக் கொடியினுடைய ஆரம்பம் எங்கிருக்கின்றது என்று பார்த்தால், நாம் நட்டு வைத்த பாத்திபோல் இருக்கும் ஒரு சிறிய குழியிலிருந்து தொடங்குகின்றது. இப்போது அம்பிகையினுடைய நாபியானது பாத்திபோல் இருக்கிறது. அதிலிருந்து புறப்படுகின்ற இந்த ரோம வரிசைகள் ஒரு கொடிபோல இருக்கிறது. அப்போது நாபியில் தொடங்கி ஸ்தனங்கள் வரையிலும் இந்த கொடி பரவி இருக்கின்றது. இந்த கொடியின் ஆரம்பம் அம்பிகையின் நாபி. இதற்கு முன்பு முகவர்ணனை பார்க்கும்போது வாக்பவ கூடம் என்று சொன்னோம். இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் கழுத்திலிருந்து தொடங்கி நாபி, இடுப்பு வரையிலும் மத்யம கூடம். காமராஜ கூடத்தினுடைய வர்ணனை. இதற்குப் பிறகு இடுப்புக்கு கீழே இருப்பது சக்தி கூடத்தினுடைய வர்ணனை. இந்த மத்யம கூடம் என்கிற காமராஜ கூடத்தில் இந்த நாமம் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்தது.

ஏனெனில், கிட்டத்தட்ட இந்த நாமத்தில் மத்திம கூடம் வந்து விட்டது. ஸ்தனங்கள் முதல் நாபி வரையிலும் உள்ள இந்தப் பகுதியில் மத்யம கூடம் வந்துவிட்டது. இன்னொரு சூட்சுமத்தையும் பார்ப்போம். இதற்கு முந்தைய நாமத்திலிருந்து இனி வரக்கூடிய மூன்று நாமங்கள் அனைத்தும் காமகலா தியானம் என்கிற சொரூபத்தை உடையது என்று சொன்னோம். இந்த நாமத்திலேயுமே அந்த காமகலா தியானம் என்கிற சொரூபம் அந்த நாமத்தில் உண்டு. எளிமையாகப் பார்த்தால் இந்த நாமத்தில் நாபியையும் அந்த இரண்டு ஸ்தனங்களையும் வர்ணித்திருக்கிறார்கள் அல்லவா… இப்போது நாபியையும் இரண்டு ஸ்தனங்களையும் கொடிபோன்று இணைத்துப் பாருங்கள். நமது மனதுக்குள் அப்படியே தியானமாக கொண்டு வந்து பாருங்கள். அப்படி இணைத்தோமானால் ஒரு inverted triangle உருவாகும். அதாவது தலை கீழாக்கப்பட்ட முக்கோணம் உருவாகும். அதாவது அதோமுக அல்லது தலைகீழாக்கப்பட்ட த்ரிகோணம் உருவாகும். அந்த த்ரிகோணம்தான் இங்கு முக்கியம். அந்த த்ரிகோணம்தான் இங்கு காமகலா தியானம். இந்த மந்திர சாஸ்திரத்திற்குக் கூட நாம் செல்ல வேண்டாம். மேலே இரு ஸ்தனங்கள். கீழே ஒரு நாபி மூன்றையும் இணைத்தால் வரும் மனச் சித்திரத்தை இப்போது தியானியுங்கள்.

இப்படி தியானிப்பதற்கு பெயர்தான் காமகலா தியானம். அப்போது அந்த உயர்ந்த காமகலா தியானத்திற்குரிய சித்திரத்தையே இந்த நாமம் சொல்கிறது. வேறு எந்த வகையிலும் இந்த நாமத்தை பார்க்கக் கூடாது. முழுக்க முழுக்க நம்மை அந்தர்முகமாக்கக் கூடிய நாமம் இது. நம்மை முற்றிலும் அகமுகமாக்கும் நாமம் இது. சக்ரத்திற்குள் ஒவ்வொரு ஆவரணமாக உள்ளே போகும்போது எட்டாவது ஆவரணமாக வருவது இந்த த்ரிகோணம். அந்த த்ரிகோணத்தில் இருக்கக்கூடிய மத்தியில் இருக்கக்கூடிய பிந்து ஸ்தானமே ஒன்பதாவது ஆவரணம். இப்போது அம்பிகையினுடைய ஸ்தனங்களையும் நாபியையும் இணைக்கும்போது ஒரு த்ரிகோணம் உண்டாகிறதல்லவா.. அந்த த்ரிகோணத்தை நாம் தியானிக்கிறோம். அந்த த்ரிகோணத்தை  சக்ரத்தில் உள்ள எட்டாவது ஆவரணத்தில் உள்ளதுபோல தியானிக்கிறோம். இப்போது அந்த த்ரிகோணத்தில் பிந்து ஸ்தானம் எது வெனில் அதுவே நடுவே உள்ள ஒன்பதாவது ஆவரணம். அது எதுவென்று பார்த்தால் அதுவே அம்பிகையினுடைய ஹ்ருதய ஸ்தானம். நாம் இதை விவரிக்கும்போதும் கேட்கும்போது இதை மனதில் இருத்தி அந்த காட்சியைப் பாருங்கள். இப்படி பார்ப்பதே இங்கு காமகலா தியானம். இதை அப்படியே நம்முடைய உள்ளத்தில் அந்தர்முகமாக வைத்து தியானிக்க வேண்டும். அப்போது நம்மீது அந்த த்ரிகோணத்தையும் நம்முடைய ஹ்ருதயத்தை அந்த பிந்து ஸ்தானமாகவும், (ரத்தத்தை சுத்திகரித்து அனுப்பும் இதயம் அல்ல) இங்கு ஞானிகள் சொல்கிற வலது புற இருதய ஸ்தானம்.

நீங்கள் நான் என்று சுட்டுகிற இடம். அதன் மையத்திலே அம்பிகையை வைத்து பாவிக்கும்போது அந்த ஆத்மாவே லலிதா திரிபுரசுந்தரி என்கிற உண்மைப் பொருள் நமக்குள் விளங்கும் என்பது தெரியும். பாவனோ உபநிஷத்தில் கடைசியில் சொல்லக் கூடிய ‘‘ஆத்மாவை லலிதா திரிபுரசுந்தரி’’ என்று தெரியும். இதை அப்படியே நமக்குள் நாம் உணர வேண்டும் என்பதற்காகவே வசின்யாதி வாக் தேவதைகள் வர்ணிக்கிறார்கள். அந்த பிந்து ஸ்தானமே நம்முடைய ஹ்ருதய ஸ்தானமென தியானிக்க தியானிக்க ஆத்மாவே லலிதை என்கிற மேலான உண்மை தெரியும். லலிதா ஸஹஸ்ரநாமத்தின் ஒவ்வொரு வர்ணனைக்குள்ளும், இனி சொல்லப்பட்ட நாமங்களிலும் சரி, வருகின்ற ஒவ்வொரு நாமத்திற்குள்ளும் சரி, நம்மை அந்தர்முகமாக்கக் கூடிய ஒரு பெரிய விஷயம் இருக்கிறது. அது  மாதாவில்ஆரம்பித்து அம்பாளுடைய ஒவ்வொரு அங்க வர்ணனையில் ஆரம்பித்து, இனி வரக்கூடிய பண்டாசுர வதமாகட்டும், இனி வரக்கூடிய நிர்குணமான நாமங்கள் ஆகட்டும், சகுனமான நாமங்கள் ஆகட்டும்… எல்லா நாமத்திற்குள்ளேயும் நம்மை அந்தர்முகப் படுத்தக் கூடிய விஷயங்கள்தான் இருக்கிறது. மற்றபடிக்கு இதை ஏதோ சாதாரணமாக எடுத்துக் கொள்ளமுடியாது.

இப்போது இந்த நாமத்திற்கு அந்தர்முகமான அர்த்தம் இருக்குமல்லவா… அதாவது அத்யாத்மிகமான ஆழமான தத்துவம் ஒன்று இருக்குமல்லவா அதையும் பார்ப்போமா!இதற்கு முந்தைய நாமத்தில் அம்பிகையினுடைய இரண்டு ஸ்தனங்களையும் பர ஞானம், அபர ஞானம் என்று பார்த்தோமல்லவா… இப்போது இந்த இடத்தில் அந்த ஸ்தனங்களை சொல்கிறார்கள். ஆனால், அந்த ஸ்தனங்களைச் சொல்வதற்கு முன்னால் அம்பிகையினுடைய நாபி பிரதேசத்திலிருந்து எழும்பிய அந்த ரோம வரிசையைச் சொல்லி, அதாவது ஒரு பாத்தியிலிருந்து எப்படி ஒரு கொடி எழும்புகிறதோ அதுபோல வளர்ந்து அந்த ரோமமாகிய கொடி இரண்டாகப் பிரிந்து சென்று அந்த நுனியில் பழுத்த இரண்டு ஸ்தனங்கள் போல் என்று இதில் வருவதை மீண்டும் நினைவுபடுத்திக் கொள்வோம்.இப்போது இந்த நாபியிலிருந்து எழும்பி வளர்ந்தது இருக்கிறதல்லவா… இது என்ன என்று பார்ப்பதற்கு முன்னால் சிறிய விஷயத்தை நினைவுபடுத்துகிறோம். நமக்கு பரஞானம்… அபர ஞானம் நமக்குத் தேவை. இந்த இரண்டையும் நமக்கு அம்பிகை அளிக்கிறாள். அபர ஞானம் என்பது வேதங்களில் தொடங்கி நாம் பேசுகின்ற சத்சங்கங்கள் வரை எல்லாமுமே அபரஞானம்தான். பரஞானம் என்பது தன்னைத் தானே உணர்வது. காமேஸ்வரராகிய ஆத்ம சொரூபத்தை காண்பித்துக் கொடுப்பது பரஞானம். இப்போது இரண்டும் அம்பிகையின் கருணையால் அளிக்கின்றாள் என்று பார்த்தோம். அது சரி இந்த இரண்டும் எங்கிருந்து தொடங்குகின்றது.

இந்த இரண்டினுடைய origin point எது. இந்த நாமத்தில் எங்கிருந்து தொடங்குகின்றது எனில் நாபியிலிருந்துதான் தொடங்குகின்றது. இந்த பரஞானமும் அபரஞானமும் நமக்கு அம்பிகை கொடுப்பதற்கான மூலகாரணம் எது? அந்த நாபி எது என்று பார்த்தால்… அந்த நாபி ஸ்தானமே அம்பாளுடைய கருணை. அம்பாளினுடைய கருணையின் வெளிப்பாடாகத்தான் இந்த இரண்டும் நமக்குக் கிடைத்தது. அவள் நம் மேல் கருணை வைக்கவில்லையெனில் இந்த பர ஞானம், அபரஞானத்திற்கு இடமே இல்லை. அந்த கருணை இருப்பதால்தான் இப்போது நம்மால் இந்த நாமத்தைச் சொல்ல முடிகிறது. கேட்க முடிகிறது. அதற்கான உள்ளார்த்தத்தையும் தரிசிக்க முடிகிறது. இதுவே அம்பாளின் கருணை. இதை நாம் புரிந்துகொண்டால் அம்பிகையே என் மீது கருணை கொள்ளம்மா… என்று பிரார்த்திக்கக் கூட மாட்டோம். அவளின் கருணையே இப்படி சொல்லச் செய்து, கேட்கச் செய்து எல்லாமும் நடைபெறுகிறது. இந்த நாபியும் அந்த ரோம வரிசை பெருகி வளர்ந்து வந்து கனிகளாகின்றன என்பது அம்பிகையின் காரணமற்ற கருணையைத் தவிர வேறில்லை. பர ஞானம், அபரஞானம் கிடைப்பதன் காரணத்தின் மூலமே கருணைதான். எத்தனை முறை நாம் நினைத்தாலும் சொன்னாலும் அந்தக் கருணையை எழுத்தாகவோ, சொல்லாகவோ, பேச்சிலோ வெளிப் படுத்த முடியாது. அதையும் தாண்டியது அந்தக் கருணை. அந்தக் கருணைக்கு எந்தக் காரணமும் இல்லை. ஆனால், அந்த காரணமற்றதானேலேயே பரஞானத்தையும், அபரஞானத்தையும் அளித்து விடுகின்றாள்.

இதைத்தான் அவ்வியாஜ கருணை என்பார்கள். அந்தக் கருணை இல்லாவிடில் எதுவுமே சித்திக்காது. நமக்கொன்று புரிகின்றது. தெரிகின்றது என்றால் அது அவளின் கருணை அவ்வளவுதான். ஷீர்டி பாபாவின் சரித்திரத்தின் ஓரிடத்தில் ஒரு பக்தர் மராட்டியிலுள்ள ஞானேஸ்வரரின் ஞானேஸ்வரி என்கிற பகவத் கீதையின் விளக்கவுரையை படிக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறார். பாபாவிடம் லௌகீக விஷயங்களை வேண்டுவதற்கு எத்தனையோ பேர் சென்று நிற்கிறார்கள். சுவாமி… ஒரு பார்வை பார்க்கிறார்கள் எல்லாமும் சரியாகிவிடுகிறது. ஆனால், இந்த பக்தருக்கு அத்யாத்மிகமாக ஞானேஸ்வரி படிக்க வேண்டும். அதுதான் வேண்டுதல். வேறு வேண்டுதலே இல்லை. சுவாமி எனக்கு ஞானேஸ்வரி படிப்பதற்கு அருள் புரியுங்கள் என்று கேட்கிறார். ஆனால், பல நாட்களாக அவரால் ஞானேஸ்வரியை படிக்க முடியவில்லை. ஞானேஸ்வரிப் புத்தகம் அவரிடம் இருக்கிறது. அதை எடுத்து பிரிக்கிறார். ஆனால், தேவையில்லாத எண்ணங்கள் வந்து அந்த புத்தகத்தைப் படிக்க முடியவில்லை மூடிவைத்து விடுகிறார். இப்படியே பல நாட்களுக்கு நடக்கிறது. பல நாட்கள் கழித்து பாபாவிடம் சென்று நான் ஞானேஸ்வரி படிக்க வேண்டுமென்று நினைக்கிறேன் ஆனால், முடியவே இல்லையே. பாபா… சிரித்துக் கொண்டே அதற்கான நேரம் வரட்டும். நானே உனக்குக் கொடுக்கிறேன் என்றார். மீண்டும் சில நாட்கள் கழித்து, இவர் மற்ற பக்தர்களிடமெல்லாம் சென்று நீங்களெல்லாம் எப்படி பாராயணம் செய்கிறீர்கள்.

பாபா… உனக்கு என்ன ஆசிர்வாதம் செய்தார் என்று ஒவ்வொரு பக்தரிடமும் சென்று அவர்களின் அனுபவத்தைக் கேட்கிறார். அப்போது பாபா அவரை அருகே அழைத்து,‘‘ நான் உனக்கு தங்க ஜரிகை போட்ட பட்டுச் சால்வையை போர்த்த தயாராக இருக்கிறேன். நீ எதற்கப்பா மற்றவர்களிடம் போய் கந்தல் துணியைத் திருடிக் கொண்டிருக்கிறாய்’’ என்று கேட்கிறார். கந்தல் துணியை திருடுவது என்பது அந்த ஞானேஸ்வரி பாராயணத்தை அளிக்கக் கூடிய அனுபவத்தை கொடுக்கக் கூடியவர் நேருக்கு நேராக பாபாவே இருக்கிறார். அதை விட்டுவிட்டு உனக்கு அனுபவம் கிடைத்ததா… உனக்கு அனுபவம் கிடைத்ததா… சுவாமி எப்படி அனுக்கிரகம் செய்தார் என்று கேட்டுக் கொண்டிருப்பதையே பாபா கந்தல் துணி என்கிறார். இப்போது அதற்கான சரியான நேரம் வரும்போது, அந்த ஞானேஸ்வரி புத்தகத்தை எடுத்து வரச் சொல்லி அந்த புத்தகத்தின் மீது கைகளை வைத்து ஆசிர்வாதம் செய்து இனி படி என்று கொடுத்தாராம். அன்றிலிருந்து எந்த முயற்சியும் இல்லாமல் ஞானேஸ்வரி பாராயணமும் அர்த்தமும் தானாக புரியத் தொடங்கியது. அதற்கு முன்னால் மாதக் கணக்காக தொட முடியாத புத்தகத்தை, சுவாமி கூப்பிட்டு ஆசிர்வாதம் பண்ணி கொடுத்த கணத்திலேயே ஏற்கனவே புத்தகத்தை படித்ததுபோன்ற அனுபவம் இருந்தததாம்.

அப்போது அபர ஞானத்திற்கு பகவானுடைய கருணை வேண்டும். அம்பிகை அருள் இல்லையெனில் அபர ஞானமும் சித்திக்காது. அந்த அபர ஞானத்தின் பலனாக இருக்கக் கூடிய பர ஞானத்தையும் சித்திக்க வைப்பவளும் அம்பிகையே… ரமண பகவானோ, ஜே.கிருஷ்ணமூர்த்தியோ, பாபாவோ போன்றோர்கள் ஏன் பேச வேண்டுமென்றால் கருணையே ஆகும். எத்தனை பேருக்கு அவர்கள் பேசுவது புரிகின்றது… புரியவில்லை … என்றெல்லாம் இல்லை. ஆனால், அவர்களின் கருணை என்கிற மழையினை அந்த உபதேசங்களின் மூலம் கொட்டுகிறார்கள். தன் முன்னால் உட்கார்ந்து கேட்கிறவர்களுக்கு புரியவில்லை என்று தெரிந்து கூட அவர்கள் பேசிக் கொண்டே இருந்திருக்கிறார்கள். ஏனெனில், புரிவது புரியாதது பிரச்னை கிடையாது. இது அவர்களின் compassion என்கிற கருணை. இந்தக் கருணையை நம்மால் filter என்று வடிகட்டவே முடியாது. இது யாருக்கு… யாருக்கு இல்லை… என்பதெல்லாம் அவர்களுக்குக் கவலையே இல்லை. அது வெறுமே கருணையை பொழிந்து கொண்டிருக்கும் அவ்வளவே. Once that compassion opens… its just pours. அவ்வளவுதான். இன்னும் சொல்லப்போனால் இந்த நாபியிலிருந்துதான் சிருஷ்டியே தொடங்குகிறது. எப்படி என்று பார்த்தால், அம்பாளின் புருஷ சொரூபமாக மன் நாராயணனை சொல்வார்கள்.

பாற்கடலில் நாராயணன் பள்ளிகொண்டிருக்கும்போது எங்கிருந்து சிருஷ்டி தொடங்குகிறது. அவனின் நாபியிலிருந்து தொடங்கிய தாமரைத் தண்டும் அதன் நுனியில் பூத்த தாமரையும் அதன் மேல்தான் பிரம்மா இருக்கிறார். அந்த பிரம்மாதான் எல்லா சிருஷ்டியும் செய்கிறார். நான்கு வேதங்களையும் படைக்கிறார். அந்த தாமரைத் தண்டு எங்குபோய் முடிகிறது பகவானுடைய நாபியில் சென்று முடிகின்றது. இந்த தியானத்தைத் தலைகீழாக்கப்பட்ட முக்கோணமாக வரைந்து அதன் மத்தியில் குங்குமம் இட்டு அந்த குங்குமத்தையே அம்பிகையின் ஹ்ருதயமாக தியானித்து வணங்கலாம். வீட்டில் வரைந்து பூஜையும் செய்யலாம். அப்படி செய்வதும் தியானிப்பதுமே காமகலா தியானமாகும். இந்த காமகலா தியான சொரூபமாக இருப்பவளே திருவாரூர் கமலாம்பிகை ஆவாள். இந்த ஒட்டுமொத்த நாமத்திற்கு உருவம் அளித்தால் அது கமலாம்பிகையாத்தான் இருக்க முடியும். இந்த நாமமும் அதன் பொருளாகவுமே கமலாம்பிகை விளங்குகிறாள். எனவே, இந்த நாமத்திற்கான கோயில் திருவாரூர் கமலாம்பிகையே ஆகும். சென்ற நாமத்தை மீண்டும் ஒருமுறை கேட்டு விட்டு இப்போது மீண்டும் இந்த நாமத்திற்கான பொருளையும் கேட்டால் இன்னும் நமக்கு நன்கு விளங்கும்.

ரம்யா வாசுதேவன் அண்டு கிருஷ்ணா

The post ஞானத்தையும் பக்தியையும் பெருகச் செய்வாள் லலிதாம்பிகை appeared first on Dinakaran.

Tags : Lalithambigai ,Lalita Sahasranama ,Ambigai ,Nabyalavala ,Romali Lathapala Kusatvayi ,
× RELATED மகாசக்தியின் ரகசியம் உணர்த்தும் நாமம்