×

கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு

சென்னை: கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய அவர்; சர்க்கரைத் தொழில் விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியிலும் கிராமப்புர மேம்பாட்டிலும் பெரும்பங்கு வகிக்கும் முக்கிய வேளாண் சார்ந்த தொழிலாகும். தமிழ்நாட்டில் 13 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 15 தனியார் என மொத்தமாக 30 சர்க்கரை ஆலைகள் இயக்கத்தில் உள்ளன. கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், கரும்பு பதிவுப் பரப்பு, உற்பத்தியினை அதிகரிக்கவும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேலும் மேம்படுத்திடவும், 2024 2025 ஆம் ஆண்டில் கீழ்க்காணும் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகை;

வேளாண்மை நிதிநிலை அறிக்கை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்புக் கூட்டங்களின்போது, அனைத்துக் கரும்பு விவசாயிகளாலும் தொடர்ந்து கேட்கப்பட்ட கோரிக்கையினை ஏற்று, கரும்பு சாகுபடிப்பரப்பு, உற்பத்தியை அதிகரிக்கவும், கரும்பு விவசாயிகள் கூடுதல் வருவாய் பெறும்வகையிலும், 2023-2024 அரவைப் பருவத்திற்கு சர்க்கரை ஆலைகளுக்குப் பதிவு செய்து கரும்பு வழங்கிய தகுதியுள்ள விவசாயிகளுக்கு, ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள நியாயமான மற்றும் ஆதாய விலைக்கு மேல் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 195 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையினை விட, முன் எப்போதும் இல்லாத அளவில் டன் ஒன்றுக்கு 215 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகையாக உயர்த்தி வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் கரும்பு விவசாயிகள் பயன்பெறுவர். இதற்கென, 250 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

கரும்பு சாகுபடி மேம்பாட்டுத்திட்டம்
கரும்பு விவசாயிகளின் நலனுக்காகவும், கரும்பு சாகுபடி செலவைக் குறைத்து, சாகுபடிப் பரப்பை அதிகரிக்கவும், சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்தவும், பூச்சி, நோய் தாக்குதலுக்கு எதிர்ப்புடைய அதிக சர்க்கரைக் கட்டுமானம் தரக்கூடிய புதிய கரும்பு இரகங்களைக் கரும்பு விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கவும் ஒன்றிய மாநில அரசு நிதியிலிருந்து 7 கோடியே 92 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துதல்
கள்ளக்குறிச்சி 1, செங்கல்ராயன், செய்யாறு, திருப்பத்தூர் ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் நவீன கரும்பு எடைமேடைகள். தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலையில் சுழல் கவிழ்ப்பான், 10 கூட்டுறவு, 2 பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் சிமெண்ட் கான்கிரீட் கரும்புத்தளங்கள். 4 கூட்டுறவு. ஒரு பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் கழிவுமண் மக்கவைக்கும் களங்கள் ஆகியவற்றை அமைக்க, ஒன்றிய, மாநில அரசு நிதியிலிருந்து, 12 கோடியே 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

சர்க்கரை ஆலைகளின் செயல்திறன் உயர்த்தும் நடவடிக்கைகள்
பெரம்பலூர், செய்யாறு, வேலூர், சேலம், மதுராந்தகம், சுப்பிரமணிய சிவா ஆகிய சர்க்கரை ஆலைகளில், கரும்பு அரவைப் பகுதி இயந்திரங்களை ஒருங்கிணைத்து, 3 கோடியே 60 இலட்சம் ரூபாய் செலவில் ஆலை அரவைப் பகுதி தானியங்கிமயமாக்கப்படும். செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 18 மெகாவாட் பவர் டர்பைனுக்குத் தேவையான புதிய டர்பைன் ரோட்டர் அசெம்பிளி, 6 கோடியே 31 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்பட்டு ஆலையில் அரவை நிறுத்தம் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

செங்கல்ராயன், வேலூர், செய்யாறு, அறிஞர் அண்ணா, பெரம்பலூர், தருமபுரி, எம்.ஆர்.கே ஆகிய சர்க்கரை ஆலைகளில் இயங்கிவரும் இணை மின் நிலையங்களில், நீர் சுத்திகரிப்பு நிலைய அயனி மற்றும் எதிர் அயனி பரிமாற்றி, ஒரு கோடியே 39 இலட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும். இதனால் ஆலையின் நீரின் தரம் மேம்படுத்தப்பட்டு, பவர் டர்பைனின் ஆயுட்காலம் நீட்டிக்கப்படும். எம்.ஆர்.கே. செய்யாறு ஆகிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்குக் கரும்பு அரவை இயந்திரத்தின் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் கருவி, ஒரு கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் கொள்முதல் செய்யப்படும்.

இதனால் மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் கருவியின் பழுது காரணமாக ஏற்படும் அரவை நேர இழப்பு தவிர்க்கப்படும். சர்க்கரை ஆலைகளின் மேம்பாட்டிற்காக, மொத்தம் 12 கோடியே 40 இலட்சம் ரூபாய் ஆலை நிதியிலிருந்து செலவிடப்படும்.

The post கரும்பு சாகுபடியை மேம்படுத்த ரூ.20.43 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Minister ,MRK Panneerselvam ,CHENNAI ,Welfare ,Legislative Assembly ,Dinakaran ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்