×

சார்பதிவாளர் பதிவு இல்லாத அலுவலக பணிக்கு மாற்றம் அதிகாரிகள் தகவல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு

வேலூர், பிப்.20: வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வழக்கல் சிக்கிய சார் பதிவாளர், பதிவு இல்லாத அலுவலக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக ரமணன் என்பவர் உள்ளார். இவர் கடந்த 1998ம் ஆண்டு இளநிலை உதவியாளராக பணியில் சேர்ந்து, பின்னர் பதவி உயர்வு பெற்று சார் பதிவாளராக பள்ளிகொண்டா, திருப்பத்தூர், வேலூர், ஆம்பூர் போன்ற இடங்களில் பணியாற்றினார். தொடர்ந்து கே.வி.குப்பம் சார் பதிவாளராக கடந்த 2022ம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் ரமணன் தனது பெயரிலும், மனைவி சவுந்தரம் பெயரிலும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து இருப்பதாக வேலூர் விஜிலென்ஸ் போலீசாருக்கு புகார் சென்றது. அதன்பேரில் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் வருமானத்துக்கு அதிகமாக 82 சதவீதம் அளவுக்கு, அதாவது ₹47 லட்சத்து 49 ஆயிரத்து 74 மதிப்பில் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் குவித்து வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, விஜிலென்ஸ் போலீசார் ரமணன் மற்றும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து, கடந்த 13ம் தேதி காட்பாடி மதி நகரில் உள்ள சார் பதிவாளர் ரமணனின் வீட்டில் வேலூர் விஜிலென்ஸ் போலீசார் சோதனை நடத்தினர்.

இதில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான வங்கி கணக்கு விவரங்கள், வீட்டுமனை பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெளியான செய்திகள் அடிப்படையில், அறிக்கை தயார் செய்து, பதிவுத்துறை ஐஜி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜிலென்ஸ் போலீசாரின் அறிக்கை கிடைத்தும், சார் பதிவாளர் ரமணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பதிவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிக்கிய ரமணனை, பத்திரப்பதிவு இல்லாத, அலுவலக பணிக்காக ராணிப்பேட்டை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கே.வி.குப்பம் சார் பதிவாளராக, குடியாத்தம் அலுவலகத்தில் பணியாற்றும் உதவியாளர், பொறுப்பு சார் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post சார்பதிவாளர் பதிவு இல்லாத அலுவலக பணிக்கு மாற்றம் அதிகாரிகள் தகவல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு appeared first on Dinakaran.

Tags : Vellore ,Ramanan ,Vellore district ,KV ,Kuppam ,Dinakaran ,
× RELATED 9 மையங்களில் நீட் தேர்வை 5,266 மாணவர்கள்...