×

இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தமிழிசை- ரங்கசாமி திடீர் சந்திப்பு சாதனை புத்தகத்தை வழங்கினார்

புதுச்சேரி, பிப். 20: இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்கக்கோரி கவர்னர் தமிழிசையை முதல்வர் ரங்கசாமி திடீரென சந்தித்தார். புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று மூன்றாண்டு நிறைவு பெற்றதை தொடர்ந்து தமிழிசைக்கு முதல்வர் ரங்கசாமி நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அப்போது இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஒப்புதலையும் பெற்றார். புதுச்சேரி சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டம் வரும் 22ம் தேதி கூடுகின்றது. அன்றைய தினம் அரசின் அடுத்த மூன்று மாத அரசு செலவினங்களுக்கான இடைக்கால பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்ய உள்ளார்.

இந்நிலையில் ரங்கசாமி நேற்று மதியம் ராஜ்நிவாஸ் சென்று தமிழிசை சந்தித்தார். அப்போது புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு செய்ததை குறிப்பிட்டதோடு, சாதனை புத்தகத்தை அவரிடம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். தொடர்ந்து வரும் 22ந்தேதி புதுச்சேரி பேரவையில் தாக்கல் செய்யவுள்ள இடைக்கால பட்ஜெட்டுக்கான கோப்புக்கு ஒப்புதல் பெற்றார். மேலும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னதாக தாக்கல் செய்யவுள்ள பட்ஜெட்டில், செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் மற்றும் அரசின் பணிகள் மற்றும் நிதி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தாக ராஜ்நிவாஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக கவர்னர் தமிழிசை புதுச்சேரி தொகுதியில் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி வந்தது. தேர்தலில் போட்டியிடுவீர்களா? என்பது சஸ்பென்ஸ் என தொடர்ந்து தமிழிசை கூறி வந்தார். மேலும் கடந்த இரண்டு தினங்களாக டெல்லியில் முகாமிட்டிருந்த தமிழிசை நேற்று புதுச்சேரி திரும்பினார். இது போன்ற சூழலில் ராஜ்நிவாசில் தமிழிசையை முதல்வர் சந்தித்து பேசிய விவகாரம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பு 20 நிமிடங்கள் நீடித்தது, பின்னர் வெளியே வந்த ரங்கசாமியிடம் இது குறித்து கேட்டபோது, பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.

The post இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் தமிழிசை- ரங்கசாமி திடீர் சந்திப்பு சாதனை புத்தகத்தை வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Tamilisai ,Puducherry ,Chief Minister ,Rangaswamy ,Governor ,Rangasamy ,
× RELATED தாமரைக்கு வாக்களித்து என்னை எம்.பி.,...