×

ஈரோடு, மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள் மனு

 

ஈரோடு,பிப்.20: ஈரோடு மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள் அளித்துள்ள மனு விவரம்: நாங்கள் சுமார் 55 வியாபாரிகள் ஈரோடு, மணிக்கூண்டு, முத்துரங்கம் வீதியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் அதிகாலை 5 மணி முதல் 9 மணி வரை சாலையோரம் கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகிறோம்.

அங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான அனைவருக்குமான பல்வேறு பொருள்களை விற்பனை செய்து வருகிறோம். சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக இப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் எங்களை, மாநகராட்சி அதிகாரிகள் தற்போது நாங்கள் கடைகள் அமைத்து வியாபாரம் செய்ய தடை விதித்துள்ளனர்.

மேலும், வியாபாரம் செய்தால் பொருள்களை பறிமுதல் செய்வோம் என்றும் கூறி வருகின்றனர். திடீரென கடைகள் அமைக்கக் கூடாது என கூறுவதால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை நாங்கள் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 4 மணி நேரம் வியாபாரம் செய்து கொள்ள அனுமதி அளிக்க ஆவன செய்யவேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஈரோடு, மணிக்கூண்டு பகுதி சாலையோர வியாபாரிகள் மனு appeared first on Dinakaran.

Tags : Erode ,Manikundu ,Manu ,Erode Manikundu ,People's Grievance Day ,Erode Collector ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...