×

ஆம்னி பேருந்துகள் 3 இடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி: மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை

சென்னை: போக்குவரத்து ஆணையர் வெளியிட்ட அறிக்கை: தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பிப்.9ம் தேதி வெளியிட்ட இடைக்கால உத்தரவை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13ம் தேதி வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கை செய்தியை எதிர்த்தும், கடந்த ஜன.22ம் தேதி போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதன்மூலம் கடந்த ஜன.22ம் தேதி போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் பிப். 9ம் தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13ம் தேதி வெளியிடப்பட்ட பத்திரிகைச்செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி, சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி, கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ஆகிய 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை. இந்த 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

இந்த 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், Red Bus, Abhi Bus, உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும். மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும்.

The post ஆம்னி பேருந்துகள் 3 இடத்தில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அனுமதி: மீறினால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போக்குவரத்து ஆணையர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Borur toll plaza ,Surappattu toll plaza ,Klambakkam bus terminal ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...