×

கொருக்குப்பேட்டை- ஆரம்பாக்கம் இடையே கூடுதல் ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டும்: ரயில்வே பூங்காவை சீரமைக்க கோரிக்கை

பொன்னேரி: கொருக்குப்பேட்டை முதல் ஆரம்பாக்கம் இடையே 64 கிமீ தூரத்திற்கு ஒரே ஒரு காவல் நிலையம் மட்டுமே உள்ளதால் கூடுதல் ரயில்வே காவல் நிலையங்களை அமைக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்க ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மீஞ்சூரில் ரயில் பயணிகள் சங்க தலைவர் தீனதயாளன் தலைமையில் காப்பாளர் ராஜகோபால் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தனம் மாலை நடந்தது. இதில், அத்திப்பட்டு- சூலூர்பேட்டை இடையே தற்போதுள்ள 2 வழித்தடத்தை 4 வழி பாதையாக மாற்ற வேண்டும்.

புறநகர் ரயில்களின் காலதாமதத்தை தவிர்க்க சென்னை- அத்திப்பட்டு இடையே அமைக்கப்பட்டுள்ள 3, 4வது வழித்தடத்தை விரைவு மற்றும் சரக்கு போக்குவரத்திற்கு முழுமையாக பயன்படுத்த வேண்டும். கும்மிடிப்பூண்டி புறநகர் ரயில் மார்க்கத்தில் கொரோனா பெருந்தொற்றுக்கு முன் இயக்கிய அனைத்து ரயில்களையும் மீண்டும் முழுமையாக இயக்க வேண்டும். அலுவலகம் மற்றும் கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக அனைத்து ரயில்களையும் 12 பெட்டிகள் கொண்டதாக மாற்ற வேண்டும்.

கும்மிடிப்பூண்டி வழியாக வந்து செல்லும் அனைத்து விரைவு ரயில்களையும் கும்மிடிப்பூண்டியில் ஒரு நிமிடமாவது நிறுத்த வேண்டும். மெட்ரோ ரயிலை விம்கோ நகரில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை நீட்டிக்க வேண்டும். கொருக்குப்பேட்டையில் இருந்து ஆரம்பாக்கம் வரையிலான சுமார் 64 கிலோ மீட்டர் இடையே கொருக்குப்பேட்டையில் மட்டுமே ரயில்வே காவல் நிலையம் உள்ளது. இதனால் இந்த மார்கத்தில் பயணிகளுக்கு ஏற்படுகின்ற பல்வேறு சட்டம்-ஒழுங்கு, பாதுகாப்பு, திருட்டு, வழிப்பறி, விபத்து உள்ளிட்ட பிரச்னைகளுக்கு புகார் கொடுக்க கொருக்குப்பேட்டை செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

இதை கருத்தில் கொண்டு மீஞ்சூர் அல்லது பொன்னேரியில் ரயில்வே இருப்பு பாதை காவல் நிலையத்தை புதிதாக ஏற்படுத்த வேண்டும்.  விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையம் செல்லும் பயணிகள் வசதிக்காக சூலூர்பேட்டை – திருவொற்றியூர் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மரணமடையும் பட்சத்தில் அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு கொண்டு செல்லும் வசதி சமீப காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வசதியினை மீண்டும் துவக்க வேண்டும். மீஞ்சூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள ரயில்வே துறைக்கு சொந்தமான பூங்காவை சீர் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் சங்க செயலாளர் தனுஷ்கோடி, சமூக ஆர்வலர் அசோக் பிரியதர்ஷன், அத்திப்பட்டு குணசேகரன், அசோக் லேலண்ட் சேகர், எண்ணூர் பவுண்டரி அருள், சரவணன், வேலாயுதம், பொன்னேரி சுகுமார் உள்ளிட்ட ரயில் பயணிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post கொருக்குப்பேட்டை- ஆரம்பாக்கம் இடையே கூடுதல் ரயில்வே காவல் நிலையம் அமைக்க வேண்டும்: ரயில்வே பூங்காவை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Korukuppettee ,Ponneri ,Korukuppet ,Aarvakkam ,Railway Passengers' Association ,Meenjoor… ,Korukuppet- ,Arambakkam ,Dinakaran ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்