×

மணிலாவில் கூடுதல் மகசூல் பெற ஜிப்சம் உரத்தினை பயன்படுத்த வேண்டும்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகளால் பயிரிடப்படும் எண்ணெய்வித்துப் பயிர்களில் மணிலா முதன்மையான பயிராகும், மணிலா பருப்பில் 48.50 சதவீத எண்ணெய் சத்தும். 25.28 சதவீத புரதச்சத்தும். உயிர்ச்சத்துக்கள், தாது உப்புக்கள், ஆக்ஸிஜனேற்றத் தடுப்பான்கள் போன்ற சத்துக்கள் உள்ளன, இதில் வேர்முடிச்சுகள் காணப்படுவதால் மண் வளத்தை மேம்படுத்துகிறது. பயிர் சுழற்சியில் முக்கிய அங்கமாக உள்ளது,

திருவள்ளுர் மாவட்டத்தில் 5708 ஹெக்டேர் பரப்பளவில் மணிலா சாகுபடி செய்யப்பட்டுள்ளது, ஒரு ஹெக்டேருக்கு ஜிப்சம் 400 கிலோ வீதம் 40-45வது நாளில் பாசனப்பயிருக்கும், 40-75 வது நாளில் மானாவாரிப் பயிருக்கும் செடிகளில் ஓரமாக மண்ணின் ஈரத்தன்மையைப் பொறுத்து இட வேண்டும். மண்ணைக் கொத்தி ஜிப்சம் இட்டு மண் அணைக்க வேண்டும். ஜிப்சம் இடுவதால் மேல் மண்ணை இலகுவாக்குகிறது.

சிம்புகள் எளிதில் மண்ணில் இறங்க உதவுகிறது. கால்சியம் மற்றும் கந்தக குறைபாடு நிவர்த்தி செய்யப்படுகிறது. பருப்பின் எண்ணெய்ச்சத்துக்களை அதிகரிக்கவும். திரட்சியான காய்கள் தோன்றவும் வழிவகை செய்கிறது. நூற்புழுவால் ஏற்படும் சொறிநோயை தவிர்க்கிறது. நில வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஜிப்சம் ஏக்கருக்கு 200 கிலோ வீதம் 50 சதவிகித மானியத்திலும் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.250 மானியம் வழங்கப்படுகிறது.

மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் ஜிப்சம் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலியில் முன்பதிவு செய்தும் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகியும் பயன்பெறலாம் என வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன் தெரிவித்துள்ளார்.

The post மணிலாவில் கூடுதல் மகசூல் பெற ஜிப்சம் உரத்தினை பயன்படுத்த வேண்டும்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Manila ,Tiruvallur ,Tiruvallur district ,Associate ,Dinakaran ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...