×

தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் உலக தாய்மொழி நாள் நாளை கொண்டாட்டம்: தமிழ்நாடு அரசு தகவல்

தாம்பரம்: தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் நாளை உலகத் தாய்மொழி நாள் கொண்டாட்டப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: யுனெஸ்கோ நிறுவனத்தினால் 1999ம் ஆண்டு அறிவிக்கப்பட்டவாறு, பிப்ரவரி 21ம் நாள் ஆண்டுதோறும் ‘உலகத் தாய்மொழி நாளை’ தமிழ் வளர்ச்சித் துறை உவகைப் பெருவிழாவாக கொண்டாடி வருகிறது.

இந்த ஆண்டு, உலகத் தாய்மொழி நாள் நாளை (புதன்கிழமை) தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் முன்னிலையில் சென்னை, தாம்பரம், கிறிஸ்தவக் கல்லூரியின் ஆண்டர்சன் அரங்கில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கொண்டாடப்படுகிறது. விழாவில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தமிழ் வளர்ச்சித் துறை செயலாளர் சுப்பிரமணியன், கிறிஸ்தவக் கல்லூரியின் முதல்வர் பால் வில்சன் மற்றும் தமிழ்த் துறைத் தலைவர் டேவிட் பிரபாகர் உரையாற்றுகின்றனர்.

கவிஞர் நெல்லை ஜெயந்தா தலைமையில், காவில் ஆடும் களிமயிலாய்ப் பாவில் ஆடும் பாட்டரங்கம் ‘இவர்கள் இன்றும் இருக்கின்றார்கள்’ என்ற தலைப்பில் நடக்கிறது. இதில் திருவள்ளுவர் எனும் தலைப்பில் கவிஞர் கங்கை மணிமாறன், இளங்கோவடிகள் எனும் தலைப்பில் கவிஞர்சொக்கலிங்கம், ஔவையார் என்ற தலைப்பில் கவிஞர் ஆதிரா முல்லை, கம்பன் என்ற தலைப்பில் கவிஞர் ஆண்டாள் பிரியதர்ஷினி, பாரதியார் என்ற தலைப்பில் கவிஞர் ஜான் தன்ராஜ், பாரதிதாசன் என்ற தலைப்பில் கவிஞர் இதயகீதம் ராமனுஜம் கவிதை பாட உள்ளனர்.

தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தின் முழுநேர உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதியுமான முகமது ஜியாவுதீன் தலைமையில் தாய்மொழி போற்றுவோம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடக்கிறது. கிறிஸ்தவக் கல்லூரி பேராசிரியர்கள் யக்னசேகர், முனிராஜா, சாந்தி, ரஜினி, சதாசிவம், சுஜிதா, லிவிங்ஸ்டன் பேசுகின்றனர். இதை தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரி மாணவர்கள் கலைநிகழ்ச்சி நடக்கிறது. தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் (பொ) சத்தியப் பிரியா, உதவி இயக்குநர் ஜெயஜோதி மற்றும் பணியாளர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் உலக தாய்மொழி நாள் நாளை கொண்டாட்டம்: தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : World Mother Language Day ,Tambaram ,Christian ,College ,Tamilnadu Govt ,Tamil Nadu government ,Tambaram Christian College ,UNESCO ,
× RELATED தாம்பரம் மாநகராட்சி செம்பாக்கத்தில்...