×

சிங்கபெருமாள் கோவில் அருகே சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

செங்கல்பட்டு: சிங்கபெருமாள் கோவில் அருகே சாலையில் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. எனவே, இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். செங்கல்பட்டு அருகே சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள சென்னை-திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஏராளமான ஓட்டல்கள், டீக்கடைகள், திருமண மண்டபம் உள்பட சாலையோரத்தில் 10க்கும் மேற்பட்ட நடைபாதை மீன் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்த பகுதியில் சிறுகடைகள், திருமண மண்டபம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் ஆறாக பெருகி ஓடிவருகிறது. இதனால், சிங்கப்பெருமாள்கோவில் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் நடந்து செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பாதசாரிகள் மீது வேகமாக செல்லும் வாகனங்கள் மூலமாக கழிவுநீர் வாரியிறைக்கப்படுகிறது. இதனால், அவர்களின் உடைகள் நாசமாகி வருகின்றன. மேலும், அப்பகுதி ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் கடும் துர்நாற்றத்துடன் கொசு தொல்லையும் அதிகரித்து வருகிறது.

இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, சிங்கப்பெருமாள்கோவில் ஜிஎஸ்டி நெடுஞ்சாலை பகுதிகளில் ஆறாக ஓடிவரும் கழிவுநீரை உடனடியாக அகற்றி, அவற்றை முறையாக சீரமைத்து வெளியேறுவதற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்கிடையே, சிங்கப்பெருமாள்கோவில்-ஒரகடம் பகுதியில் ரயில்வே மேம்பாலப் பணிக்கு இடையூறாக உள்ள கடைகளை அகற்றும் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. அந்த கட்டிட கழிவுகளும் ஜிஎஸ்டி நெடுஞ்சாலையிலேயே கொட்டப்படுகின்றன. வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக உள்ளது.

The post சிங்கபெருமாள் கோவில் அருகே சாலையில் ஆறாக ஓடும் கழிவுநீர்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sewage ,Singaperumal temple ,Chengalpattu ,Chennai-Trichy ,Singaperumal ,
× RELATED போதைப்பொருள் கடத்திய வாலிபர் கைது: 605 கிலோ குட்கா, மினிலாரி பறிமுதல்