×

செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் தீவிர சோதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க, மாவட்ட காவல் துறை சார்பில் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், மாமல்லபுரம், செங்கல்பட்டு என மொத்தம் மூன்று கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் எல்லைகள் உள்ளன. இந்த பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தரப்பில் புகார் வந்தவண்ணம் இருந்தன. இதனை தடுக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை நிர்வாகம் அதிரடி காட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் உத்தரவின்படி, மாவட்ட முழுவதும் உள்ள காவல் எல்லைக்கு உட்பட பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 9 போலீசார் என குழுவாக அமைத்து சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன தணிக்கையில் ஈடுபட்ட வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு உட்கோட்டம் காவல் துணை கண்காப்பாளர் புகழேந்தி கணேசன் மேற்பார்வையில், செங்கல்பட்டு நகர காவல் நிலையம் அருகே பழை பேருந்து நிலைய ரயில்வே மேம்பாலத்தில் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரவி தலைமையில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, ஹெல்மெட் அணியாமலும், ஓட்டுநர் உரிமம் இல்லாமலும் வரும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகின்றன. உரிய ஆவணம் இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து நகர காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது. சென்னையில் இருந்து செங்கல்பட்டு நகருக்குள் வரும் முக்கிய வழியாக உள்ள செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மற்றும் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் மாநில நெடுஞ்சாலை புறவழிசாலை பகுதியிலும் போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. எனவே, காவல் துறை சோதனை மேலும் தீவிரப்படுத்தி குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது. இதோபோல், மதுராந்தகம், மாமல்லபுரம் உள்ளிட்ட கோட்டங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

* திருப்போரூர், அச்சிறுப்பாக்கத்திற்கு புதிய ஆய்வாளர் நியமனம்
மதுராந்தகம்: திருப்போரூர், அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட ஜி 7 அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த ஆய்வாளர் 2 நாட்களுக்கு முன்பு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து, தற்போது திருப்போரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த வெங்கடேசன் என்பவர் அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்திற்கு புதிய ஆய்வாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல், சென்னை ஓட்டேரியில் பணியாற்றி வந்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த சரவணன் திருப்போரூர் காவல் நிலைய ஆய்வாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க போலீசார் 24 மணி நேரமும் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu district ,Chengalpattu ,Madhurandakam ,Mamallapuram ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!