×

10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

திருப்போரூர்: திருப்போரூரில் கடந்த 10 ஆண்டகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை தற்போது குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். திருப்போரூரில் சுமார் 1350 வீடுகள் கொண்ட சாரே ஹோம்ஸ் என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில், 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புக்கு செல்லும் பிரதான சாலை திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமானது என்றும், அதற்கான உரிய அனுமதி பெறாமலும், குத்தகைத்தொகை செலுத்தாமலும் சாலை அமைக்கப்பட்டு உள்ளது என்று கூறி கோயில் நிர்வாகம் தார்சாலை அமைக்க அனுமதி மறுத்தது.

இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலையானது அவ்வழியே செல்லும் வாகனங்களின் அழுத்தத்தால் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. தற்போது இந்த குடியிருப்பில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லும் இணைப்பு சாலையானது கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் அமைக்கப்பட்டிருந்தாலும் மிகச்சிறிய தூரமே உள்ளது. கோயிலுக்கு சொந்தமானதாக இருப்பதால் புதிய சாலை அமைக்க முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்புவாசிகள் கூறுகையில், ‘இந்த குடியிருப்பை கட்டிய நிறுவனம் பல்வேறு வசதிகளை செய்து தருவதாக வாக்குறுதி கொடுத்ததின் அடிப்படையில் நாங்கள் இங்கு வீடுகளை வாங்கி குடி வந்தோம். ஆனால், வந்த பின் ஒரு வசதியும் இல்லை. குடிநீர், பள்ளிக் கூடம், சமுதாயக்கூடம், நீச்சல் குளம், உடற்பயிற்சிக் கூடம் போன்ற வசதிகளை செய்து தருவதாக கூறி ஏமாற்றி விட்டது. மேலும், கோயில் நிலத்தில் சாலை அமைத்திருப்பதால் நாங்கள் குடியிருப்புக்கு செல்ல முடியாமல் கோயில் நிர்வாகம் பள்ளம் தோண்டி விடுகிறது.

நாங்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் வீட்டு வரி செலுத்துகிறோம். மேலும், நாங்கள் குடியிருக்கும் மனைப்பிரிவுக்கும், அடுக்குமாடி குடியிருப்புக்கும் மாமல்லபுரம் உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெற்று கட்டியுள்ளோம். இதை கருத்தில் கொண்டு தெரு மின் விளக்கு, குடிநீர் வசதி, சாலை வசதி செய்து தருமாறு கேட்டோம். சாலை அமைந்துள்ள பகுதி திருப்போரூர் கந்தசாமி கோயிலுக்கு சொந்தமானது என்பதால் அவர்களிடம் ஆட்சேபணை இல்லா கடிதம் பெற்றுத் தந்தால்தான் செய்ய முடியும் என்று கூறிவிட்டனர்.

ஆனால், கூடுதலாக வைப்புத்தொகை செலுத்தக் கோரியும் பல்வேறு காரணங்களை கூறியும் கந்தசாமி கோயில் நிர்வாகம் ஆட்சேபணைக் கடிதம் தர மறுக்கிறது. இருப்பினும், எங்கள் கட்டுமான நிர்வாகம் எங்களை ஏமாற்றி விட்டதால் கந்தசாமி கோயில் நிர்வாகமும், பேரூராட்சி நிர்வாகமும் இங்கு வசிக்கும் 800 குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு விதிவிலக்கு அளித்து சாலை, மின் விளக்கு, குடிநீர் வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

The post 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார் சாலை குண்டும் குழியுமாக மாறிய அவலம்: சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Tarred ,Tirupporur ,Saree Homes ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சி குப்பை கிடங்கில் தீ