×

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் வங்கப்புலி சீரியஸ்: பூங்கா நிர்வாகம் தகவல்

கூடூவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் வங்க புலி சீரியசாக உள்ளது என்று பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும் ஏராளமான பறவைகளும் உள்ளன. இதை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்து கண்டுகளித்து விட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில், வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள ஆண் வங்க புலி சீரியசாக உள்ளதாக பூங்கா நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வரும் விஜயன் என்ற 21 வயது ஆண் வங்கப் புலி கடந்த 24ம் தேதி முதல் உணவு உட்கொள்வதை குறைத்து கொண்டதன் காரணமாக படிப்படியாக அதனுடைய உடல்நிலை சரியில்லாமல் போனது.

ரத்த மதிப்பீடு செய்ததில் கல்லீரல் மற்றும் சிறுநீரக பாதிப்புகளுக்குள்ளானது தெரியவந்தது. இதையடுத்து, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தின் ஆலோசனையுடன், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் வங்க புலிக்கு வயிறு இறக்கம் ஏற்பட்டு சோர்வாக காணப்படுகிறது. மேலும் பூங்கா வன உயிரின மருத்துவ குழுவினரால் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளது.

* தப்பிய மற்றொரு குரங்கும் பிடிபட்டது
கான்பூரில் இருந்து கடந்த ஜனவரி 28ம் தேதி வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டுவரப்பட்ட 10 அனுமன் குரங்குகளில் இரண்டு குரங்குகள் கடந்த 13ம் தேதி மதியம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பியது. இதனையடுத்து பூங்கா நிர்வாகத்தினர் மண்ணிவாக்கம் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய பகுதிகளில் கூண்டு வைத்து கண்காணித்து வந்தனர். அதில் ஒரு குரங்கு மண்ணிவாக்கத்தில் கடந்த 17ம் தேதி சிக்கியது. மற்றொரு குரங்கு ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஐயஞ்சேரி, மதுரை மீனாட்சிபுரத்தில் உள்ள மக்கள் குடியிருக்கும் பகுதியில் நேற்று காலை உலா வந்தது. இதனை கண்காணித்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

The post வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆண் வங்கப்புலி சீரியஸ்: பூங்கா நிர்வாகம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Vandalur Zoo ,Vandalur ,Zoo ,Arignar Anna Zoo ,Chennai ,
× RELATED கோடை விடுமுறையை முன்னிட்டு இன்று வண்டலூர் உயிரியல் பூங்கா இயங்கும்