×

ரூ.1516.82 கோடியில் கடல்நீரை சுத்திகரிக்கும் 2வது நிலைய பணி நிறைவு வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் நேரு தகவல்

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே நெம்மேலியில் ரூ.1516.82 கோடியில் கடல்நீரை சுத்திகரிக்கும் 2வது நிலையத்தின் கட்டுமான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். அப்போது, பணிகள் 100 சதவீதம் நிறைவடைந்துள்ளநிலையில், வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். சென்னையில், குடிநீர் பற்றாக்குறை மற்றும் வறட்சியைப் போக்கும் வகையில் கடந்த 2003 – 2004ம் ஆண்டு தொலைநோக்கு திட்டமான கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, மீஞ்சூரில் காட்டுப்பள்ளி, கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி என இரண்டு இடங்களில் நாளொன்றுக்கு தலா 10 கோடி லிட்டர் கொள்திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கு தங்கு தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. இந்த, 2 சுத்திகரிப்பு நிலையங்கள் சென்னையின் மொத்தக் குடிநீர் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்தன.

இந்நிலையில், நெம்மேலியில் உள்ள 2வது சுத்திகரிப்பு ஆலையில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், கடல்நீரை உள்வாங்கும் ஆழ்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர்த்தேக்க தொட்டி, சுத்திகரிக்கப்பட்ட நீர் உந்து நிலையம், வடிகட்டடப்பட்ட கடல்நீர் நீர்த்தேக்க தொட்டி, நிர்வாகம் கட்டிடம், கசடுகளை கெட்டிபடுத்தும் பிரிவு, செதிலடுக்கு வடிகட்டி, காற்றழுத்தம் மூலம் எண்ணெய் மற்றும் எதிர்மறை சவ்வூட்டு பரவல் நிலையம் ஆகியவற்றை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, குறு, சிறு மற்றும் நடுத்தர தெழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் குடிநீர் வாரிய அதிகாரிகளுடன் நேற்று நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் கார்த்திகேயன், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய செயல் இயக்குநர் சரவணன், செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், செங்கல்பட்டு எஸ்பி சாய்பிரணீத் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். தொடர்ந்து, அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறுகையில், ‘150 மில்லியன் லிட்டர் கொண்ட குடிநீர் ஆலை மாநகராட்சி சார்பில் கிரீன் பில்டிங் கட்டிடம், ரூ.700 கோடி மதிப்பில் கொடுங்கையூர் பகுதியில் பயணி திட்டம், நகராட்சி சார்பில், ரூ.1500 கோடி மதிப்பில் முடிவுற்ற பல்வேறு பணிகளை நெம்மேலியில் இருந்து வரும் 24ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

150 மில்லியன் லிட்டர் முழு உற்பத்தி செய்யும் கொண்ட திட்டமாக உருவெடுத்து உள்ளது. இங்கிருந்து, எம்ஆர்சி நகர் – நந்தனம் ஆகிய இடங்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் 13 எம்எல்டியும், ஆலந்தூர் பகுதிக்குட்பட்ட 7 இடங்களில் 7 எம்எல்டியும், பள்ளிக்கரணைக்கு 4 எம்எல்டியும், ஜல்லடையான் பேட்டைக்கு 3 எம்எல்டியும், மடிப்பாக்கத்திற்கு 15 எம்எல்டியும், வேளச்சேரிக்கு 35 எம்எல்டியும், பள்ளிபட்டுக்கு 32 எம்எல்டியும், உள்ளகரம் – புழுதிவாக்கத்திற்கு 11 எம்எல்டியும், உத்தண்டிக்கு 1 எம்எல்டியும், பல்லாவரம், ராதா நகர், தாம்பரம் மாநகராட்சிக்கு 23 எம்எல்டி என 150 எம்எல்டி வழங்க பைப் லைன் பதிக்கும் பணி முடிந்துள்ளது.

வரும் 24ம் தேதி சனிக்கிழமை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார். இதன், திட்ட மதிப்பீடு ரூ.1516.82 கோடியாகும். மொத்தம், 9 லட்சம் பேர் பயனடைகின்றனர். முழுமையாக 150 எம்எல்டி வழங்க தயார் நிலையில் உள்ளோம். அருகில், 400 எம்எல்டிக்கான வேலை தொடங்கி நடந்து வருகிறது. 3 வருடத்தில் அப்பணி முடியும். இவ்வாறு, அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.

The post ரூ.1516.82 கோடியில் கடல்நீரை சுத்திகரிக்கும் 2வது நிலைய பணி நிறைவு வரும் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்: அமைச்சர் நேரு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Minister ,Nehru ,Mamallapuram ,KN Nehru ,sea water treatment plant ,Nemmeli ,Dinakaran ,
× RELATED பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம்...