×

கணவர் விபத்தில் இறந்த நிலையில் போலீஸ் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது பிரசவ வலி: ஆண் குழந்தையை பெற்ற இளம்பெண்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் கணவர் விபத்தில் இறந்த நிலையில் போலீஸ் தேர்வு எழுதிக் கொண்டிருந்த கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. உத்தரபிரதேச மாநில காவல்துறை சார்பில் போலீஸ் கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்பு தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. அந்தத் தேர்வை எழுத நிறைமாத கர்ப்பிணியான சுனிதா தேவி (28) என்பவர், உன்னாவ் மாவட்டத்தில் உள்ள மகரிஷி தயானந்த் மிஷன் கல்லூரிக்கு வந்தார். தொடர்ந்து அவர் தேர்வு மையத்தில் எழுதிக் கொண்டிருந்தார்.

காலை 11.30 மணியளவில், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மாவட்ட கலெக்டர் பால்கிஷோர் துபேக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது, அவர் பள்ளி மேலாளர் பிரபாத் சுக்லாவின் காரில், சுனிதா தேவியை அப்பகுதியில் அமைந்துள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். அங்கிருந்த மருத்துவர்கள் சுனிதா தேவிக்கு பிரசவம் பார்த்தனர். தற்போது தாய் மற்றும் குழந்தை இருவரும் நலமாக இருப்பதாக டாக்டர் ஷிப்ரா ஜா தெரிவித்தார். தேர்வு மையத்தில் பிரசவ வலி ஏற்பட்ட சமயத்தில், 50 கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்ததாக சுனிதா தேவி கூறினார்.

பிறந்த குழந்தைக்கு ஆராத்யா என்று குடும்பத்தார் பெயரிட்டனர். சுனிதாவின் கணவரான விவசாயி தீபக், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த சாலை விபத்தில் இறந்தார் மற்றும் தம்பதியருக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் கூறினர். தேர்வு மையத்தில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தை பெற்ற சுனிதா தேவியை பலரும் பாராட்டுகின்றனர்.

முறைகேட்டில் ஈடுபட்ட 244 பேர் கைது
உத்தரபிரதேச காவல்துறையின் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கான்ஸ்டபிள் பதவிக்கான ஆட்சேர்ப்புத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட அல்லது திட்டமிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சிலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் 244 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள்
கூறினர்.

The post கணவர் விபத்தில் இறந்த நிலையில் போலீஸ் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது பிரசவ வலி: ஆண் குழந்தையை பெற்ற இளம்பெண் appeared first on Dinakaran.

Tags : Kanpur ,Uttar Pradesh ,Uttar Pradesh State Police ,
× RELATED வரதட்சணை கேட்டு துன்புறுத்தல்;...