×

கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் வழக்கத்தை விட மாறாக கோடை காலத்திற்கு முன்பே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியுள்ளது. இன்று திருவனந்தபுரம், கண்ணூர், கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் ஏப்ரல், மே ஆகிய மாதங்கள் தான் கோடை காலமாகும். இந்த மாதங்களில் கூட அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பநிலை இருக்காது. அதுவும் பாலக்காடு, புனலூர் உள்பட குறிப்பிட்ட ஒரு சில இடங்களில் ஒரு சில நாட்கள் மட்டுமே அதிகபட்ச வெப்பநிலை இருக்கும். பெரும்பாலும் கோடை காலங்களில் கோடை மழை பெய்யும் என்பதால் வெப்பநிலை ஓரளவு தணிந்து விடும். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதத் தொடக்கத்திலேயே கேரளா முழுவதும் வெயில் சுட்டெரிக்கத் தொடங்கி விட்டது. திருவனந்தபுரம், கோட்டயம், ஆலப்புழா, கோழிக்கோடு, கண்ணூர், பாலக்காடு, புனலூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக 37 டிகிரி செல்சியசுக்கு (98.6 பாரன்ஹீட்) மேல் வெப்பநிலை அதிகரித்து உள்ளது.

இதற்கிடையே நேற்று கண்ணூர் விமான நிலையத்தில் அதிகபட்சமாக 37.9 டிகிரி செல்சியஸ் (100.22 பாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகி இருந்தது. கேரளாவில் பல்வேறு பகுதிகளில் வழக்கத்தைவிட அதிகமாக 4 டிகிரி செல்சியசுக்கு மேல் தற்போது வெப்பநிலை உள்ளது. இந்தநிலையில் இன்று திருவனந்தபுரம், கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் வழக்கத்தை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்பதால் இந்த 3 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. எனவே காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நேரடியாக உடலில் வெயில் படும் வகையில் நடமாட வேண்டாம் என்று கேரள சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

The post கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில் 3 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Kannur ,Kozhikode ,
× RELATED பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கேரள...