×

3 விசைப்படகுகள் தீ பிடித்து எரிந்தன: குமரி அருகே நள்ளிரவில் பரபரப்பு

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே நள்ளிரவில் 3 ஆழ்கடல் மீன்பிடி விசைபடகுகள் தீயில் எரிந்து நாசமாகின. முன்விரோதம் காரணமாக யாராவது தீ வைத்து விசைபடகுகளை எரித்தார்களா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ளது வைக்கல்லூர் கணியன்குழி பகுதி. இங்குள்ள ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையின் கீழ் பகுதியில், தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் தனியார் படகு தளங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த படகு தளங்களில் மீன்பிடி தொழில் முடிந்து ஏராளமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் முடிந்து மீண்டும் மீன்பிடி தொழிலுக்கு புறப்பட்டு செல்வது வழக்கம்.

அதேபோல் வைக்கல்லூர் வட்டக்கால் பகுதியில் உள்ள தனியார் படகு தளத்தில் வள்ளவிளை பகுதியை சேர்ந்த யோபு, தூத்தூர் பகுதியை சேர்ந்த பெனி, கடியப்பட்டிணம் பகுதியை சேர்ந்தவர் என்று 3 பேருக்கு சொந்தமான விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இந்த 3 படகுகளும் நேற்று நள்ளிரவு சுமார் 12 மணி அளவில் திடீரென தீ பிடித்து எரிந்தது. இது சம்பந்தமாக கொல்லங்கோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். உடனே அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் சம்பவ நடந்த இடத்திற்கு பக்கத்தில் தீயணைப்பு வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் சுமார் 200 மீட்டர் தொலைவில் தீயணைப்பு வாகனத்தை நிறுத்தி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து ஆட்டோ ஒன்றை சம்பவ இடத்துக்கு அவசரம் அவசரமாக வரவழைத்தனர். பின்னர் அதில் தீ தடுப்பு உபகரணங்களை ஏற்றிக் கொண்டு சென்று தீயை வீரர்கள் அணைத்தனர். இதற்கிடையே படகின் சிலிண்டர் வெடித்து சிதறியது. விசைப்படகுகள் மரம், பைபரால் உருவாக்கப்பட்டு உள்ளதால் 3 விசைப்படகுகளும் சுமார் ஒன்றரை மணி நேரமாக கொழுந்துவிட்டு எரிந்தது. நீண்ட நேரத்துக்கு பிறகு 3 படகுகளும் முழுவதுமாக எரிந்து நாசமாகியது. ஒரே நேரத்தில் 3 விசைப்படகுகளும் தீ பிடித்து எரிந்ததால் முன்விரோதம் காரணமாக யாராவது படகிற்கு தீ வைத்து விட்டு சென்றார்களா? அல்லது மின்கசிவு காரணமாக ஒரு படகில் பிடித்த தீ மற்ற படகுகளுக்கும் பரவியதா? என்பது தெரியவில்லை. இது தொடர்பாக நித்திரவிளை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

The post 3 விசைப்படகுகள் தீ பிடித்து எரிந்தன: குமரி அருகே நள்ளிரவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kumari ,Nagercoil ,Nithravila ,Kanyakumari district ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடி பணிக்கு கோடை மழையை எதிர்நோக்கும் விவசாயிகள்