×

‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடைய கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !!

சென்னை: தமிழக அரசின் 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில், ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்பதும் இடம்பெற்றுள்ளது. இது குறித்து பேசிய அவர், “தமிழகத்தின் ஊரகப் பகுதிகளில் குடிசைகளை மாற்றி அனைவருக்கும் பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்துத் தரும் நோக்கத்துடன் எடுக்கப்பட்ட சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிராமப்பகுதிகளில் ஏறத்தாழ 8 லட்சம் குடிசை வீடுகளில் மக்கள் வாழ்ந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.’குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை எய்திடும் வகையில், வரும் 2030-ஆம் ஆண்டுக்கு தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும்.

முதற்கட்டமாக, 2024-25 ஆம் ஆண்டில் 1 லட்சம் புதிய வீடுகள் ஒவ்வொன்றும் 3.50 லட்சம் ரூபாய் செலவில் உருவாக்கப்படும்.தேர்தெடுக்கப்பட்ட பயனாளிகளில் சொந்தமாக வீட்டுமனை இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை வழங்குவதுடன், வீடு கட்டுவதற்கான தொகை அவர்தம் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்படும். அறிவியல்பூர்வமான கணக்கெடுப்பு, வெளிப்படையான பயனாளிகள் தேர்வு முறை தங்கள் கனவு இல்லங்களை பயனாளிகள் தாங்களே உருவாக்கிக் கொள்ளும் வாய்ப்பு என குறிப்பிடத்தக்க அம்சங்களைத் தாங்கிய இப்புதிய திட்டம் ‘கலைஞரின் கனவு இல்லம்’ என்ற பெயரில் வரும் நிதியாண்டில் 3,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கினை அடைய கலைஞரின் கனவு இல்லம் திட்டம் !! appeared first on Dinakaran.

Tags : Artist's Dream House ,Tamil Nadu ,Chennai ,Finance Minister ,Thangam Tennarasu ,Tamil Nadu government ,House ,
× RELATED கோடைகாலத்தில் சூரியனிலிருந்து வரும்...