×

மல்லிகை செடிகளை தாக்கும் மொட்டு துளைப்பான் புழுக்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலை அதிகாாிகள் தகவல்

 

பெரியகுளம், பிப். 19: மல்லிகை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் மொட்டு துளைப்பான் புழுக்களை எளிதில் கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் சுமார் பல ஆயிரம் ஹெக்டேரில் மல்லிகைப்பூக்கள் சகுபாடியாகிறது. மல்லிகை விவசாயத்தில் செடிகளின் பாதுகாப்பு மிக முக்கியமானது. மல்லிகை செடிகளில் வளர்ந்துள்ள மொட்டுகளில் மொட்டு துளைப்பான் என்னும் புழு கடும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந்த புழுவால் தாக்கப்பட்ட மொட்டுகள் சிவப்பு நிறமாக மாறி உதிர்ந்து, விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒரு புழுவானது தனது ஆயுள் காலத்தில் 2 முதல் 3 மொட்டுகளை உதிர்ந்து விழும்படி செய்கின்றது. இப்புழுவானது தன் ஆயுளின் ஆரம்ப காலகட்டத்தில் மஞ்சள் நிறமாகவும், வளர்ச்சி பெற்ற பின் பச்சை நிறமாகவும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த தையோக்லோபிரிட் 240 எஸ்சி ஒரு மில்லி அல்லது ஸ்பினோசாட் 45 எஸ்சி 0.5 மில்லி அளவில் எடுத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இயற்கை முறையில் 5 சதவீதம் வேப்பங்கொட்டை கரைசலை தெளித்தும் கட்டுப்படுத்தலாம். இதனை தயார் செய்ய 5 கிலோ வேப்பங்கொட்டையினை பொடித்து, 10 லிட்டர் தண்ணீரில் ஒரு நாள் இரவு முழுவதும் ஊறவைத்த பின்னர் அதனை நன்கு கலக்கி விட்டு வடிகட்ட வேண்டும். இதனை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் மல்லிகை செடிகள் மீது தெளிக்க வேண்டும். அதேபோல் ஒரு ஏக்கருக்கு 4 விளக்கு பொறிகள் வைப்பதன் மூலமும் மொட்டு துளைப்பான் புழுக்களின் தாய்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்’’ என்றனர்.

The post மல்லிகை செடிகளை தாக்கும் மொட்டு துளைப்பான் புழுக்களை எளிதில் கட்டுப்படுத்தலாம்: தோட்டக்கலை அதிகாாிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Periyakulam ,Theni district ,Dinakaran ,
× RELATED பெரியகுளம் பகுதியில் காட்டுத்தீயால்...