×

பண்ணைய முறையில் வேளாண்மை உற்பத்தியை பெருக்க அறிவுறுத்தல்

சிவகங்கை, பிப்.19:சிவகங்கை உழவர் பயிற்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, விவசாய பொருட்களின் உற்பத்தியினை பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகப்படுத்திடவும் ஒருங்கிணைந்த பண்ணையம் சிறந்த வழிமுறையாகும். வேளாண் சார்ந்த தொழில்களான கால்நடை வளர்ப்பு, மீன் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, மண்புழு உரம் தயாரித்தல் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஆகியவற்றை விஞ்ஞான முறையில் மேற்கொண்டு குறைந்த செலவில் நிலையான வருமானம் பெறலாம்.

சிவகங்கை மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மானாவாரி நிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் மேற்கொள்ள நல்ல வாய்ப்புகள் உள்ளது. இம்முறையில் பண்ணை கழிவுகள் மறு சுழற்சி செய்யப்பட்டு இயற்கை உரமாக பயன்படுவதால் இடுபொருட்கள் தேவை வெகுவாக குறையும். பயிர் சாகுபடியோடு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வேளாண் சார்ந்த தொழில்களை தேர்ந்தெடுத்து ஒருங்கிணைத்து செயல்படுத்தும் போது தனிப்பயிர் மூலம் கிடைக்கும் வருமானத்தை விட கூடுதல் வருமானம் பெறலாம். மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஏற்படும் வறட்சி மற்றும் மழையால் ஏற்படும் எதிர்பாராத திடீர் இழப்புகளை தவிர்த்திட சிறந்த மாற்றுத்திட்டம் ஒருங்கிணைந்த பண்ணையம் ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பண்ணைய முறையில் வேளாண்மை உற்பத்தியை பெருக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Sivagangai ,Sivagangai Farmers Training Center ,Dinakaran ,
× RELATED கோடைகால பயிற்சி முகாம் இன்று துவக்கம்