×

மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம்

 

கோவை, பிப். 19: தேசிய தொழிற்பழகுநர் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில் மண்டல அளவிலான தொழிற்பழகுநர்களுக்கான அப்ரண்டிஸ் சேர்க்கை முகாம் வரும் 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா ஐடிஐயில் நடக்கிறது.

இந்த முகாமில் ஒன்றிய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் துறை நிறுவனங்களும் பங்கேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளனர். இதில், பங்கேற்று தேர்வு பெற்றால் தொழிற்பழகுநர் பயிற்சி அளிக்கப்பட்டு ஒன்றிய அரசின் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் வழங்கப்படும்.

இந்த சான்றிதழ் பெற்றவர்களுக்கு அரசு, தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் முன்னுரிமையும் கிடைக்கிறது. தொழிற்பழகுநர் பயிற்சின் போது உதவித்தொகை தொழிற்பிரிவுகளுக்கு ஏற்ப தொழிற்நிறுவனங்களால் வழங்கப்படுகிறது.

அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பத்தாம் வகுப்பு, 12ம் வகுப்பு, என்சிவிடி மற்றும் எஸ்சிவிடி தேர்ச்சி பெற்றவர்கள், உரிய அசல் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு உதவி இயக்குனர், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினர் தொழில்பயிற்சி நிலைய வளாகத்தை 95665-31310, 94864-47178 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post மண்டல அளவிலான தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் appeared first on Dinakaran.

Tags : Zonal Level Vocational Recruitment Camp ,Coimbatore ,Enrollment ,Zonal Level ,Tamil Nadu Government Employment and Training Department ,Zonal Apprentice Enrollment Camp ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்