×

ஆவடி ரயில் நிலையத்தில் மேம்பாலத்தை இடிக்கும் பணியால் மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி

 

ஆவடி, பிப். 19: ஆவடி ரயில் நிலையத்தில் பழைய மேம்பாலம் இடிக்கும் பணியால் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். ஆவடி ரயில் நிலையத்தில் பயணிகள் நடந்து செல்வதற்கு வசதியாக பழைய மேம்பாலம் இருந்தது. இந்த மேம்பாலம் நீண்ட நாள் பழமை அடைந்த நிலையில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு புதிய மேம்பாலம் மூன்று மாதத்திற்கு முன் அமைக்கப்பட்டது. எனவே பழைய மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று முன் தினம் இரவு நடந்தது.

இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து நேற்று காலை 6.30 மணி வரை மின்சார ரயில்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக நேற்று காலை ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.

காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திருவள்ளூரில் இருந்த சென்ற புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த மின்சார ரயில்களும் எக்ஸ்பிரஸ் இரும்பு பாதையில் இயக்கப்பட்டதால், பட்டாபிராம் ரயில் நிலையத்தில் இருந்து பட்டரவாக்கம் இடையில் உள்ள ரயில் நிலையங்களில் நிற்காமல் சென்றது. இந்த பணியின் காரணமாக, நேற்று முன்தினம் இரவு 10.00 மணி முதல் நேற்று காலை 6.30 மணி வரை சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக 16 மின்சார ரயில்களும், அரக்கோணத்தில் இருந்து சென்னை மார்க்கமாக 11 மின்சார ரயில்களும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post ஆவடி ரயில் நிலையத்தில் மேம்பாலத்தை இடிக்கும் பணியால் மின்சார ரயில்கள் ரத்து: பயணிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Avadi railway station ,Avadi ,Aavadi ,railway station ,Dinakaran ,
× RELATED ஆவடி காவல் ஆணையகத்திற்கு உட்பட்ட...