×

மின் விளக்குகள் இல்லாத கேளம்பாக்கம் – கோவளம் சாலை: இரவில் விபத்து அபாயம், வாகன ஓட்டிகள் அவதி

 

திருப்போரூர். பிப்.19: கிழக்கு கடற்கரை சாலையையும், பழைய மாமல்லபுரம் சாலையையும் இணைக்கும் வகையில் கேளம்பாக்கம் மற்றும் கோவளம் இடையே பக்கிங்காம் கால்வாயில் இணைப்பு பாலம் மற்றும் 4 கி.மீ. தூரத்திற்கு சாலை உள்ளது. மீனவ கிராமங்களில் இருந்து விற்பனைக்கு கொண்டு வரப்படும் மீன்கள் இவ்வழியாக கொண்டு வரப்பட்டு கேளம்பாக்கம் மார்க்கெட்டில் விற்கப்டுகின்றன. மேலும், பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கல்லூரிகள், பள்ளிகள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு செல்லும் மக்கள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

மேலும் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை விமான நிலையம் செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். இந்த சாலையில் பாதி தூரம் கேளம்பாக்கம் ஊராட்சியிலும், பாதி தூரம் கோவளம் ஊராட்சியிலும் அடங்கி உள்ளது. இந்த சாலையில் எங்கும் மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பயணம் செய்வது கடினமாக உள்ளது. இரவு நேரங்களில் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள்களில் செல்வோர் ஒருவித பயத்துடனே செல்ல வேண்டி உள்ளது.
இதன் காரணமாக சாலையில் பயணம் செய்வோரிடம் செல்போன் பறிப்பு, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளது.

கேளம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய சாலைப்பகுதியில் மின் கம்பமே இல்லை. ஆனால் கோவளம் ஊராட்சியில் அடங்கிய சாலைப்பகுதியில் மின் கம்பங்கள் உள்ளன. ஆனால் ஒன்றில் கூட மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. சாலையின் இருபுறமும் முகத்துவாரமும் சாலையின் குறுக்கே பக்கிங்காம் கால்வாயும் உள்ளதால் எந்நேரமும் ஆபத்துடனே பயணிக்கும் அபாயம் இந்த சாலையில் உள்ளது. கேளம்பாக்கம் மற்றும் கோவளம் ஆகிய இரண்டு ஊராட்சிகளுமே போதிய நிதி ஆதாரம் இன்றி தவிப்பதால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த 4 கி.மீ. தூரம் உள்ள சாலையில் தேவையான இடங்களில் மின்விளக்கு வசதி செய்துதர வேண்டுமென பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post மின் விளக்குகள் இல்லாத கேளம்பாக்கம் – கோவளம் சாலை: இரவில் விபத்து அபாயம், வாகன ஓட்டிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kelambakkam ,Kovalam ,Tiruporur ,Buckingham Canal ,East Coast Road ,Old Mamallapuram Road ,Dinakaran ,
× RELATED பெண்கள் போற்றப்படும் இடங்களில் எல்லாம் வெற்றிதான்!