×

220 ஆண்டுகள் பழமை வாய்ந்தது: ராஜாஜி ஹால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது; ரூ.17 கோடியில் புனரமைப்பு, அடுத்த ஆண்டுக்குள் திறக்க திட்டம்

சென்னை: வரலாற்று சிறப்பு மிக்க ராஜாஜி ஹாலை புனரமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெற்று வருவதால் அடுத்தாண்டிற்குள் திறக்க திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் முக்கிய மைல்கல்லாக விளங்கியவைகளுள் ஒன்று அவர்களது கட்டிட கலையாகும். ஏனெனில், எதிர் நாட்டு படையினருடன் வெற்றி பெற்றதை குறியீடுகளாகவும், நினைவுகளாகவும் நிலைத்து நிற்க அவர்கள் சிலைகளையும், மண்டபங்களையும் கட்டி வைத்தனர்.

அந்தவகையில், தமிழகத்தின் தலைநகரான சென்னையின் வரலாற்று சிறப்பு மிக்க பழைமையான கட்டிடங்களை இன்றளவும் நாம் வியந்து பார்ப்பதற்கு இவையும் ஒரு காரணம். குறிப்பாக, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை உயர்நீதிமன்றம், ரிப்பன் மாளிகை, விக்டோரியா மஹால் உள்ளிட்ட கட்டிடங்கள் தற்போது வரை இந்த கட்டிடமா? இது ஆங்கிலேயர்கள் காலத்தில் கட்டப்பட்டது என்ற பெயரை நிலைத்து நிற்க வைத்திருக்கிறது. அதன்படி, தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்களின் இறுதி அஞ்சலி, திரைப்படங்கள், பொது விழாக்கள், கண்காட்சி என நடைபெற்ற இந்த இடத்தை கண்டிராதவர் யாரும் இல்லை.

அது தான் சென்னை அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள ராஜாஜி ஹால். 220 ஆண்டுகால பழமை வாய்ந்த இந்த மண்டபத்திற்கு பின் மிகப்பெரிய நீண்ட நெடிய வரலாறு உள்ளது. 19ம் நூற்றாண்டில் திப்பு சுல்தானுக்கும், ஆங்கிலேயேர்களுக்கும் எதிரான போரில் பிரிட்டிஷ் படைகள் வெற்றி பெற்றன. இதை நினைவுகூரும் வகையில் அப்போதைய சென்னை மாகாணத்தின் எட்வர்ட் கிளைவ் பிரபு ஆட்சி காலத்தில் 1802ம் ஆண்டு கட்டப்பட்டது. 120 அடி நீளம், 65 அடி அகலம், 40 அடி உயரத்தில் 42,918 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் இக்கட்டிடத்தை கிழக்கிந்திய கம்பெனியின் பொறியாளர் ஜான் கோல்டிங்காம் கட்டினார்.

இதன் பின்னர், இந்த மண்டபம் 1875 மற்றும் 1895ல் மறுவடிவமைக்கப்பட்டன. குறிப்பாக கிரேக்க பாணியில் கட்டப்பட்ட இந்த மண்டபம், ஆங்கிலேயர்களின் முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கும் இடமாகவும், அரசு விழாக்கள் மற்றும் அப்போதைய முக்கியஸ்தர்களின் விருந்துகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ராஜாஜி முதல்வராக இருந்த போது இங்கு சட்டமன்ற கூட்டங்களும் நடத்தப்பட்டன. ராஜாஜியின் நினைவாக இந்த கட்டிடத்திற்கு ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பொறுப்பு ஏற்ற பின்னர், பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாத்து புனரமைப்பு செய்யும் பொருட்டு, கண்காணிப்பு பொறியாளர் கல்யான சுந்தரம் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அதன்படி, 2022-23ம் நிதியாண்டில் பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின் போது 17 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.100 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், ரூ.17 கோடி செலவில் ‘ராஜாஜி ஹால்’ புத்துயிர் பெறும் வகையில் புனரமைக்கும் பணிகள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக நடந்துவருகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மூன்று தலைமுறைகளை கண்ட கட்டிடமான ராஜாஜி ஹால் மறுசீரமைத்து புனரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, சிமென்ட் இல்லாமல் பழமையான முறைப்படி சாதாரணமான சுண்ணாம்பு பூச்சு இல்லாமல் பழமை வாய்ந்த தீர்வை பூச்சு முறைகளையே பயன்படுத்தி வருகிறது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கட்டிடம் தொன்மை மாறாமல் அதே உறுதி தன்மையுடன் இருக்கும் வண்ணம் பணிகள் நடைபெறுகிறது. இதுவரை 10சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது. சேதமடைந்த சுவர்களின் பூச்சு வேலையில் 30க்கும் மேற்பட்ட கொத்தனார்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மண்டபத்தில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தரைத்தளம் தாழ்வாக இருப்பதால் அதனை உயர்த்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்த மண்படத்தின் திறந்த மொட்டை மாடியில் நெடுவரிசைகள் மற்றும் தாழ்வான சுவர்கள் இணைக்கப்பட்ட வளைவுகளால் சூழப்பட்டுள்ளதால் அசல் பாரம்பரிய ‘மேனரிஸ்ட்’ பாணியை மீட்டெடுக்க முயற்சித்து வருகிறோம். அதேபோல், பெரிய தூண்களும் படிக்கட்டுகளும் தான் மண்டபத்தின் முக்கிய ஈர்ப்பாகும் அதனையும் புதுப்பிக்கும் வேலைகள் நடந்துவருகின்றன. மேலும், இந்த பணிகள் அனைத்தும் அடுத்தாண்டுக்குள் நிறைவடைந்து திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கலாம். அதற்கான பணிகளை வேகமாக செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

* கிரேக்க பாணியில் கட்டப்பட்ட இந்த மண்டபம், ஆங்கிலேயர்களின் முக்கிய முடிவுகள் குறித்து விவாதிக்கும் இடமாகவும், அரசு விழாக்கள் மற்றும் அப்போதைய முக்கியஸ்தர்களின் விருந்துகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டது.

* இந்தியா சுதந்திரமடைந்த பின்னர் ராஜாஜி முதல்வராக இருந்த போது இங்கு சட்டமன்ற கூட்டங்களும் நடத்தப்பட்டன. ராஜாஜியின் நினைவாக இந்த கட்டிடத்திற்கு ராஜாஜி மண்டபம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

* முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் 17 பாரம்பரிய கட்டிடங்கள் ரூ.100 கோடியில் மறுசீரமைத்து புனரமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அந்தவகையில், ரூ.17 கோடி செலவில் ‘ராஜாஜி ஹால்’ புனரமைப்பு பணிகள் கடந்த 6 மாதத்திற்கும் மேலாக நடந்துவருகிறது.

The post 220 ஆண்டுகள் பழமை வாய்ந்தது: ராஜாஜி ஹால் மீண்டும் புத்துயிர் பெறுகிறது; ரூ.17 கோடியில் புனரமைப்பு, அடுத்த ஆண்டுக்குள் திறக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : Hall ,CHENNAI ,Rajaji Hall ,India ,Dinakaran ,
× RELATED அம்மூர் ஒழுங்குமுறை விற்பனை...