×

தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி 2 பெண்கள் பலி: சடலத்துடன் உறவினர்கள், கிராம மக்கள் மறியல்

தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அருகே, ஒற்றை யானை தாக்கியதில், 2 பெண்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால், சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 30 யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து வந்த ஒற்றை யானை நேற்று காலை, அன்னியாளம் கிராமத்தில் வசிக்கும் ஆனந்த் மனைவி வசந்தா(37) உட்பட சிலர், முட்டைகோஸ் தோட்டத்தில் களை பறிக்க சென்றனர்.

அப்போது அங்கு வந்த ஒற்றை யானை, இவர்களை கண்டு துரத்தியது. இதில் மற்றவர்கள் தப்பியோடிய நிலையில், வசந்தா யானையிடம் சிக்கி கொண்டார். அவரை தும்பிக்கையால் தூக்கி வீசி விட்டு யானை சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், அன்னியாளம் பகுதியிலிருந்து சென்ற யானை, தாசரப்பள்ளி கிராமம் அருகே வெங்கடேசப்பா மனைவி அஸ்வத்தம்மா(45) என்பவரை தூக்கி வீசி சென்றது. இதில் அவர் பலியானார். மேலும், கிராமத்திற்குள் நுழைந்து 2 மாடுகளை தாக்கி விட்டு சென்றது. அதில் ஒரு மாடு உயிரிழந்தது.

படுகாயமடைந்த ஒரு மாட்டிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆக்ரோஷமாக சென்ற ஒற்றை யானை, ஊத்தங்கரை செம்பாரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி(45), பின்னமங்கலம் அருகே ஹாலோ பிரிக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்து கொண்டிருந்த உத்தரபிரதேசம் பனாரஸ் கிராமத்தைச் சேர்ந்த ராம்ஸ்ரீ(25) என்பவரையும் தாக்கி விட்டு சென்றது. படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதனிடையே, யானை தாக்கி உயிரிழந்த வசந்தம்மாவின் உறவினர்கள், தேன்கனிக்கோட்டை வனத்துறை சோதனை சாவடி மற்றும் அன்னியாளம் கிராமத்தில் தளி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

அதே போல், அஸ்வத்தம்மாவின் உறவினர்கள் அவரது சடலத்தை தளி சாலையில் வைத்து, தாசிரிப்பள்ளி கிராமம் அருகே மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி யானையை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து, 3 மணி நேர போராட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

பின்னர், யானை தாக்கி உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்திற்கு உடனடி நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது. ஒற்றை யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, சத்தியமங்கலத்திலிருந்து தனி குழு அழைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், 2 பெண்களை தாக்கி சென்ற ஒற்றை யானையை, வனத்துறையினர் பட்டாசு வெடித்து, பின்னமங்கலம் வழியாக கும்மளாபுரம் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.

The post தேன்கனிக்கோட்டை அருகே யானை தாக்கி 2 பெண்கள் பலி: சடலத்துடன் உறவினர்கள், கிராம மக்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : Dhenkanikottai ,Krishnagiri district ,
× RELATED தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவனை...