×

2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2024-2025ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் இந்தாண்டிற்கான முதல் கூட்டம் கடந்த பிப்.12ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. கடந்தாண்டு போல, இந்தாண்டும் ‘தேசிய கீதம்’ கூட்டத்தொடர் நடப்பதற்கு முன்னதாக இசைக்கப்படவில்லை என சர்ச்சையை ஏற்படுத்தி அவையில் இருந்து ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்தார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மீறி செயல்படுவதாக ஆளுநர் மீது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர்.

இதன் பின்னர், 13ம் மற்றும் 14ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் பேரவையில் காரசாரமாக நடந்தது. இதனையடுத்து, 15ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையாற்றி, இரண்டு முக்கிய தீர்மானங்களை பேரவையில் கொண்டு வந்தார். அதன்படி, ஒரே நாடு ஒரே தேர்தல் மற்றும் தொகுதி மறுசீரமைப்பிற்கு எதிராக கொண்டு வந்த 2 தீர்மானங்களும் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், 2024-25ம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட்டை இன்று காலை 10 மணிக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ்நாடு மக்களை குறிப்பாக பெண்கள் மற்றும் ஏழை, எளியவர்களின் நலன் சார்ந்த திட்டங்களை கொண்ட அறிவிப்புகள் வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேபோன்று, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்ட மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் புதிய திட்டங்களும் பட்ஜெட்டில் இடம்பெறும். குறிப்பாக, வெளிமாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறக்கூடும். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கூடுதல் நிதி உதவி மற்றும் சலுகைகள், சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு, சாலை கட்டமைப்புகளை மேம்படுத்துவது, புதிய மேம்பாலம் உள்ளிட்ட அறிவிப்புகளும் பட்ஜெட்டில் இடம் பெறும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2023-2024ம் ஆண்டு பட்ஜெட்டில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, இந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழகத்தில் சுமார் 1 கோடியே 15 லட்சம் பெண்கள் மாதம் ரூ.1000 பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல, இந்த பட்ஜெட்டிலும் புதிய திட்டங்கள் மற்றும் ஏற்கனவே செயல்படுத்தப்படும் திட்டங்களின் விரிவாக்கம் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், சட்டப்பேரவையில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட், தமிழக மக்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனை தொடர்ந்து நாளை 2024-25ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டுகளுக்கான விவாதம் 21 மற்றும் 22ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் இதில் அமைச்சர்கள் தங்களின் பதில்களை அளிக்கின்றனர். தொடர்ந்து நிதி ஒதுக்கீட்டிற்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னம் வெளியீடு
‘தடைகளைத் தாண்டி… வளர்ச்சியை நோக்கி’ என்ற தலைப்புடன் 2024-25ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையின் முத்திரை சின்னத்தை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: நமது மாநிலத்திற்கு இயல்பாக வரவேண்டிய நிதிகளும், உதவிகளும், ஒத்துழைப்பும் கிடைக்காமல் தடைகள் பல தொடர்கின்ற நிலையிலும், முறையான, சிதையாத, கட்டுப்பாடான நிர்வாக நடைமுறைகளால் தடைகளை எல்லாம் தகர்ந்தெறிந்து, தொடர்ந்து முன்னேற்றத் திசையினில் தமிழ்நாட்டினை செலுத்திடும் நோக்கில் இந்த திராவிட மாடல் அரசு எல்லோர்க்கும் எல்லாம் என்ற இலக்கினை எளிதில் எய்திடும் வண்ணம் இன்று நான்காம் ஆண்டில் நிதிநிலை அறிக்கையை பேரவையில் அளிப்பதில் பெருமிதம் கொள்கிறது.

தமிழ்நாடு அரசின் 2024-25ம் ஆண்டின் நிதிநிலை அறிக்கை “தடைகளைத் தாண்டி வளர்ச்சியை நோக்கி” எனும் தலைப்பில் பேரவையில் பெருமிதத்துடன் அளிக்கப்படுவதை குறிக்கும் சின்னமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, “யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே” எனும் பழமொழிக்கேற்ப வரும் ஆண்டின் நிதிநிலை அறிக்கையின் வெற்றியை முன்னே முழங்கிடும் முத்து சின்னமாக இது விளங்கிடும் என்பது திண்ணம்.

* மாபெரும் 7 தமிழ்க் கனவு
தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் இடம்பெறும் 7 முக்கிய அம்சங்களை மாபெரும் 7 தமிழ்க் கனவு என்ற தலைப்பில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இன்று தாக்கல் செய்யப்படவுள்ள தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டின் நோக்கமாக உள்ள 7 முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பதை செய்தி மக்கள் தொடர்புத்துறை ‘மாபெரும் 7 தமிழ்க்கனவு’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளது.

சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய 7 அம்சங்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழக அரசின் பட்ஜெட்டில் இந்த 7 விஷயங்கள் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கும் என தெரிகிறது.

The post 2024-2025ம் நிதி ஆண்டுக்கான தமிழ்நாடு பொது பட்ஜெட் இன்று தாக்கல்: நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார் appeared first on Dinakaran.

Tags : Finance Minister ,Dangam Thenrarasu ,Chennai ,Thangam Tennarasu ,Government of Tamil Nadu ,Tamil Nadu Legislature ,Governor ,R. N. Ravi ,Anthem ,Finance ,South India ,
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...