×

சொத்தை எழுதி வாங்கி மோசடி தாயின் சிகிச்சைக்கு பணம் தராமல் மிரட்டிய மகன், மருமகள் மீது வழக்கு

தேனி, பிப். 18: மோசடியாக சொத்தை எழுதி வாங்கிவிட்டு வயது முதிர்ந்த காலத்தில் தாய்க்கு சிகிச்சை அளிக்காமல் மிரட்டிய மகன் மற்றும் மருமகள் மீது போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர். தேனி அருகே பூதிப்புரம் கோட்டைமேட்டுத் தெருவை சேர்ந்தவர் கருப்பசாமி மனைவி பேச்சியம்மாள்(62). கருப்பசாமி தேனி நகர் மேற்குச் சந்தை வளாகத்தில் டிம்பர் கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு கருப்பசாமி உயிரிழந்தார். இவர்களுக்கு பிரபாகரன் மற்றும் ராஜபிரபாகரன் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.

இவர்களில் பிரபாகரன் வசதியாக இருந்ததால் ராஜபிரபாகரனும், அவரது மனைவி ஜெயந்தியும் சேர்ந்து பேச்சியம்மாளை அவரது வாழ்நாள் முழுவதும் நல்லமுறையில் பார்த்துக்கொள்வதாகவும், மருத்துவ செலவுகளை செய்வதாகவும் ஆசைவார்த்தை கூறினர். இதனைநம்பி பேச்சியம்மாள், அவரது சொத்தை பிரபாகருக்கு தராமல் ராஜபிரபாகரனுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தார்.

இந்நிலையில், பேச்சியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனபோது, மருத்துவ சிகிச்சைக்கு கூட ராஜபிரபாகரன் பணம் தராமலும், அவரை பராமரிக்காமல் விட்டுவிட்டார். இதுகுறித்து கேட்டபோது, பேச்சியம்மாளை அவரது மகன் ராஜபிரபாகரன், மருமகள் ஜெயந்தி அசிங்கமாக பேசியதுடன் கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேச்சியம்மாள் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் முறையிட்டார். நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, இப்புகார் மனு மீது பழனிசெட்டிபட்டி போலீசார் ராஜபிரபாகரன் மற்றும் அவரது மனைவி ஜெயந்தி மீது மூதாட்டியை ஏமாற்றி சொத்தை அபகரித்து, அவரை பராமரிக்காமலும், கொலைமிரட்டல் விடுத்ததாக மோசடி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சொத்தை எழுதி வாங்கி மோசடி தாயின் சிகிச்சைக்கு பணம் தராமல் மிரட்டிய மகன், மருமகள் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Honey ,Karupasamy ,Budipuram Kottaymetut Street ,
× RELATED விருதுநகர் அருகே இருசக்கர வாகனத்தின்...