×

குடற்புழு நீக்க மாத்திரைகள் முழுமையாக விநியோகம்

 

ஈரோடு,பிப்.18: ஈரோடு மாவட்டத்தில் குடற்புழு நீக்க மாத்திரைகள் முழுமையாக விநியோகிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  குடற்புழு தொற்றால் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, பசியின்மை, பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றது. மேலும் குடற்புழுக்கள் குடலில் இருந்து கொண்டு சாப்பிடுகின்ற சத்துக்களை எடுத்துக் கொண்டு வளர்வதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரும்பு சத்து குறைபாடு,ரத்த சோகை நோய்,ஊட்டச்சத்து,விட்டமின் ஏ சத்து மற்றும் உடல் வளர்ச்சி குறைபாடுகள் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் தேசிய குடற் புழு நீக்க முகாம் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகின்றது.இதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 9ம் தேதி தேசிய குடற்புழு நீக்க தின சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இதில் 6 லட்சத்து 69 ஆயிரம் பயனாளிகளுக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டது. அதாவது இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில் 92 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து விடுபட்ட 73 ஆயிரம் பேருக்கு 2080 அங்கன்வாடி மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்,கல்வி நிறுவனங்களிலும் அல்பெண்டாசோல் மாத்திரைகள் வழங்கும் பணி நேற்று மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குடற்புழு தொற்றை தடுத்திட திறந்த வெளியில் மலம் கழிப்பது,வெளியில் செல்லும் போது காலணிகளை அணிந்து செல்வது,சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, காய்கறி பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொள்வது,சுகாதாரமான குடிநீர், உணவை உட்கொள்வது, உணவுக்கு முன், கழிவறைக்கு சென்று விட்டு வந்த பின் கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற முறைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post குடற்புழு நீக்க மாத்திரைகள் முழுமையாக விநியோகம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Erode district ,
× RELATED ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையம் அருகே...