×

ஜெய்ஸ்வால் அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா

ராஜ்கோட்: இங்கிலாந்து அணியுடனான 3வது டெஸ்டில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – ஷுப்மன் கில் ஜோடியின் பொறுப்பான ஆட்டத்தால் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 445 ரன் குவித்தது. கேப்டன் ரோகித் 131, ஜடேஜா 112, அறிமுக வீரர்கள் சர்பராஸ் 62, ஜுரெல் 46, அஷ்வின் 37, பும்ரா 26 ரன் விளாசினர். இங்கிலாந்து பந்துவீச்சில் மார்க் வுட் 4, ரெஹான் அகமது 2, ஆண்டர்சன், ஹார்ட்லி, ஜோ ரூட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன் எடுத்திருந்தது. பென் டக்கெட் 133 ரன், ஜோ ரூட் 9 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின், தாயாரின் உடல்நிலை காரணமாக சென்னை திரும்பியதால் இப்போட்டியில் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரூட் 18 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த பேர்ஸ்டோ டக் அவுட்டானார். டக்கெட் 153 ரன் (151 பந்து, 23 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் கில் வசம் பிடிபட்டார். கேப்டன் பென் ஸ்டோக்ஸ் – பென் ஃபோக்ஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்தது. ஸ்டோக்ஸ் 41 ரன் (89 பந்து, 6 பவுண்டரி), ஃபோக்ஸ் 13 ரன்னில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த ரெஹான் அகமது 6, ஹார்ட்லி 9, ஆண்டர்சன் 1 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்து அணிவகுத்தனர்.

இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன் குவித்து ஆல் அவுட்டானது (71.1 ஓவர்). மார்க் வுட் 4 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி 20 ரன்னுக்கு கடைசி 5 விக்கெட்டை இழந்தது. இந்திய பந்துவீச்சில் சிராஜ் 4, குல்தீப், ஜடேஜா தலா 2, அஷ்வின், பும்ரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 126 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரோகித் 19 ரன் எடுத்து ரூட் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். ஜெய்ஸ்வால் – ஷுப்மன் கில் இணைந்து 2வது விக்கெட்டுக்கு அபாரமாக ரன் சேர்க்க, இந்தியா வலுவான நிலையை எட்டியது.

சதம் விளாசிய ஜெய்ஸ்வால் 104 ரன் எடுத்த நிலையில் (133 பந்து, 9 பவுண்டரி, 5 சிக்சர்) காயம் காரணமாக ஓய்வு பெற்றார் (ரிடயர்டு ஹர்ட்). அடுத்து வந்த ரஜத் பத்திதார் டக் அவுட்டாகி ஏமாற்றமளிக்க, இந்தியா 3ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன் எடுத்துள்ளது. கில் 65 ரன், குல்தீப் 3 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 8 விக்கெட் இருக்க, இந்தியா 322 ரன் முன்னிலை பெற்றுள்ளதால் இன்று 4 நாள் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி கடும் நெருக்கடியை எதிர்கொள்கிறது.

* ஸ்கோர் விவரம்
இந்தியா முதல் இன்னிங்ஸ் 445
இங்கிலாந்து முதல் இன்னிங்ஸ்
ஜாக் கிராவ்லி (சி) பத்திதார் (பி) அஷ்வின் 15
பென் டக்கெட் (சி) கில் (பி) குல்தீப் 153
ஓல்லி போப் எல்பிடபுள்யு (பி) சிராஜ் 39
ஜோ ரூட் (சி) ஜெய்ஸ்வால் (பி) பும்ரா 18
ஜானி பேர்ஸ்டோ எல்பிடபுள்யு (பி) குல்தீப் 0
பென் ஸ்டோக்ஸ் (சி) பும்ரா (பி) ஜடேஜா 41
பென் ஃபோக்ஸ் (சி) ரோகித் (பி) சிராஜ் 13
ரெஹான் அகமது (பி) சிராஜ் 6
டாம் ஹார்ட்லி (எஸ்டி.) ஜுரெல் (பி) ஜடேஜா 9
மார்க் வுட் (ஆட்டமிழக்கவில்லை) 4
ஜேம்ஸ் ஆண்டர்சன் (பி) சிராஜ் 1
உதிரிகள் 20
மொத்தம் (71.1, ஆல் அவுட்) 319
விக்கெட் வீழ்ச்சி: 1-89, 2-182, 3-224, 4-225, 5-260, 6-299, 7-299, 8-314, 9-314, 10-319.
இந்தியா பந்துவீச்சு: பும்ரா 15-1-54-1, சிராஜ் 21.1-2-84-4, குல்தீப் 18-2-77-2, அஷ்வின் 7-0-37-1, ஜடேஜா 10-0-51-2.
இந்தியா 2வது இன்னிங்ஸ்
ஜெய்ஸ்வால் (காயத்தால் ஓய்வு) 104
ரோகித் ஷர்மா எல்பிடபுள்யு (பி) ரூட் 19
ஷுப்மன் கில் (ஆட்டமிழக்கவில்லை) 65
ரஜத் பத்திதார் (சி) ரெஹான் (பி) ஹார்ட்லி 0
குல்தீப் யாதவ் (ஆட்டமிழக்கவில்லை) 3
உதிரிகள் 5
மொத்தம் (51 ஓவர், 2 விக்கெட்) 196
விக்கெட் வீழ்ச்சி: 1-30, 1-185* (ஜெய்ஸ்வால் ஓய்வு), 2-191.
இங்கிலாந்து பந்துவீச்சு: ஆண்டர்சன் 6-1-32-0, ஜோ ரூட் 14-2-48-1, டாம் ஹார்ட்லி 15-2-42-1, மார்க் வுட் 8-0-38-0, ரெஹான் அகமது 8-0-31-0.

The post ஜெய்ஸ்வால் அபார சதம்: வலுவான நிலையில் இந்தியா appeared first on Dinakaran.

Tags : Jaiswal ,India ,Rajkot ,England ,Yashaswi Jaiswal ,Shubman Gill ,Saurashtra Cricket Association Stadium ,Dinakaran ,
× RELATED டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு!