×

யானை தாக்கி இறந்தவர் உடலுடன் வயநாட்டில் போராட்டம்: எம்எல்ஏக்கள் மீது நாற்காலி, பாட்டில் வீச்சு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் புலி மற்றும் யானை தாக்கி 4 பேர் இறந்துள்ளனர். கடந்த 10ம் தேதி அஜீஷ் என்பவர் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் புல்பள்ளி பகுதியைச் சேர்ந்த வனப் பாதுகாவலரான பால் என்பவர் யானை மிதித்து உயிரிழந்ததை கண்டித்து நேற்று வயநாடு மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்று காலை பிரேத பரிசோதனை முடிந்தவுடன் பாலின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்லாமல் புல்பள்ளி பகுதியில் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர். முதல் கட்டமாக ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பாலின் மனைவிக்கு வனத்துறையில் தற்காலிக வேலை வழங்கப்படும் என்றும், அவரது குழந்தைகளின் கல்விச் செலவு முழுவதும் அரசு ஏற்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதன் பிறகே போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு அப்பகுதியை சேர்ந்த எம்எல்ஏக்கள் வந்தனர். அவர்கள் மீது போராட்டக்காரர்கள் நாற்காலி மற்றும் பாட்டில்களை வீசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டினர். அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வயநாடு விரைந்தார் ராகுல்: வயநாடு தொகுதி எம்பியாக உள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி போராட்டம் பற்றி அறிந்ததும் வாரணாசியில் இருந்து வயநாடு விரைந்துள்ளார்.

The post யானை தாக்கி இறந்தவர் உடலுடன் வயநாட்டில் போராட்டம்: எம்எல்ஏக்கள் மீது நாற்காலி, பாட்டில் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Wayanad ,Thiruvananthapuram ,Kerala ,Azish ,Phulpalli ,
× RELATED வயநாட்டில் மாவோயிஸ்ட்- போலீசார் துப்பாக்கி சண்டை