×

தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க தென் முனையில் ஒலிக்கும் குரல் வடக்கிலும் எதிரொலிக்கும்: நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கிவிட்டது; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்க தொடங்கியிருக்கும் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும் என்றும், நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கி விட்டதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் திமுக சார்பில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, தேர்தல் ஒருங்கிணைப்பு குழுக்களை அமைத்து 39 நாடாளுமன்ற தொகுதிகளில் இருக்கும் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தியது. அவர்களின் கருத்துக்களையும் கேட்டது.

அதே போல தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாக சென்று தன்னார்வலர்கள் தொடங்கி, தொழில்நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரிடமும் கலந்து பேசி தேர்தல் அறிக்கையில் இடம் பெற வேண்டிய முக்கிய அம்சங்களை அவர்களிடம் இருந்தே பெற்று வருகிறது. அதே நேரத்தில் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒன்றிய பாஜ அரசு, தமிழ்நாட்டிற்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து தற்பொழுது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக, திமுக முன்னணியினர் ”உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்றத் தொகுதி வாரியாக பிப். 16, 17, 18 ஆகிய நாட்களில் பரப்புரைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் திமுக முன்னணியினர், அமைச்சர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசுகின்றனர். இன்று திருவள்ளூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பொது செயலாளர், அமைச்சர் துரைமுருகன் பேசுகிறார். தஞ்சாவூர்-பொருளாளர் டி.ஆர்.பாலு, பெரம்பலூர்-பொன்முடி, கரூர்- ஆ.ராசா எம்பி, புதுச்சேரி-ஆர்.எஸ்.பாரதி, பொள்ளாச்சி- திருச்சி சிவா எம்பி, காஞ்சிபுரம்- அமைச்சர் எ.வ.வேலு, தர்மபுரி-எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, நாகப்பட்டினம்-அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், தேனி-பொன்முத்துராமலிங்கம், நீலகிரி-திண்டுக்கல் ஐ.லியோனி, தென்காசி- முனைவர் சபாபதி மோகன், சேலம்-தமிழச்சி தங்ப்பாண்டியன் எம்பி, ஆரணி-கோவி.செழியன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். இந்த பொதுக்கூட்டம் மக்களிடையே மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு: “நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக. தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க இந்தியாவின் தென் முனையில் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் இந்தக் குரல், வடக்கிலும் எதிரொலிக்கும், இந்தியாவின் பெருமைகளை மீட்டெடுக்கும். பாசிசம் வீழும். இந்தியா வெல்லும்.

The post தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க தென் முனையில் ஒலிக்கும் குரல் வடக்கிலும் எதிரொலிக்கும்: நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையை திமுக தொடங்கிவிட்டது; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,DMK ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,India ,Dinakaran ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததையடுத்து...