×

கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் மாவட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு

சென்னை: கலைத் துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் மாவட்ட அளவிலான விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழகத்தின் கலைப் புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் கலைத் துறையில் சாதனைகள் படைத்துள்ள 18 வயதும் அதற்குட்பட்டவர்களுக்கு கலை இளமணி விருது, 19 முதல் 35 வயது வரை கலை வளர்மணி விருது, 36 முதல் 50 வயது வரை கலைச்சுடர்மணி விருது, 51 முதல் 65 வயது வரை கலை நன்மணி விருது, 66 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கலைமுதுமணி விருது வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த குரலிசை, பரதநாட்டியம் கலைஞர்கள், நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக் கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், ஓவியம், சிற்பம், நாடகக் கலைஞர்கள் மற்றும் கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம், தப்பாட்டம், கைச்சிலம்பாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட நாட்டுப்புற கலைகளை தொழிலாகக் கொண்டுள்ள கலைஞர்கள் ஆகியோர் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம். மாவட்ட, மாநில அளவிலான விருது ஏற்கனவே பெற்றவர்கள் விருதுக்கு விண்ணப்பிக்கக்கூடாது. விருதுகள் பெற கலைஞர்கள் தங்கள் சுயவிவர குறிப்பு, நிழற்படம் இணைத்து, வயதுச் சான்று, முகவரிச் சான்று (ஆதார் அட்டை நகல்) மற்றும் கலை அனுபவச் சான்றுகளின் நகல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத் துறை, சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம்- 631 502 என்ற முகவரிக்கு வரும் 29ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விவரங்களை 044-27269148 என்ற எண்ணில் பெறலாம்.

The post கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் மாவட்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை கலெக்டர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Collector ,CHENNAI ,Collector ,Rashmi Siddharth Jagade ,Chennai District ,Tamil Nadu ,
× RELATED சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக...