பூந்தமல்லி: பூந்தமல்லியை அடுத்த பாரிவாக்கம், ஆவடி சாலையையொட்டி தனியாருக்கு சொந்தமான வீட்டு மனைகள் விற்பனை செய்வதற்காக காலி இடம் உள்ளது. இவ்விடத்தில் அதிகளவில் வளர்ந்த புற்கள் மற்றும் செடி கொடிகள், புதர்களை அந்த தனியார் நிறுவன ஊழியர்கள் வெட்டி அகற்றியுள்ளனர்.
மேலும், அப்புறப்படுத்தப்பட்ட காய்ந்த புற்களை ஓரிடத்தில் சேர்த்து தீ வைத்து எரித்தனர்.
அப்போது, தரையில் காய்ந்து கிடந்த மற்ற புற்கள் மீது தீ பிடித்து காற்றின் வேகத்தில் அருகிலிருந்த மற்றொரு காலி இடத்திற்கும் பரவியது. அங்கு, ஏராளமான பிளாஸ்டிக் பைப்புகள் குவித்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அந்த பிளாஸ்டிக் பைப்புகளில் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதனால், அப்பகுதியில் கரும்புகை அதிகளவில் சூழ்ந்தது. இதுகுறித்து, பூந்தமல்லி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில், பூந்தமல்லி தீயணைப்பு அதிகாரி இளங்கோ தலைமையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். போதிய முன்னேற்பாடுகள் ஏதும் இல்லாமல் அப்புறப்படுத்தப்பட்ட புற்களை தீ வைத்து எரித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post பூந்தமல்லி அருகே பிளாஸ்டிக் பைப்புகள் தீயில் எரிந்து நாசம் appeared first on Dinakaran.