×

தனியார் வேலைவாய்ப்பு முகாம் 409 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் அன்பரசன் வழங்கினார்

பல்லாவரம்: பல்லாவரத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில், தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணையை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில், தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, தேர்வு செய்யப்பட்ட 409 இளைஞர், இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். முகாமில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டன. மொத்தம் 15,000 காலிப் பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், முகாமில் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கு வழிகாட்டுதல் மற்றும் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான பதிவுகளும் நடந்தது.

பின்னர், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில், “தமிழகம் முழுவதும் இதேபோன்று மொத்தம் 1515 தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 174 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 26 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 9563 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தந்துள்ளோம். தமிழகத்தில் உள்ள உள்ள 234 தொகுதிகளிலும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் 1 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்கட்டமாக. தற்போது வரை 98 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, அவற்றின் மூலம் 483 மாற்றுத்திறனாளிகள் உள்பட மொத்தம் 40,790 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post தனியார் வேலைவாய்ப்பு முகாம் 409 பேருக்கு பணி நியமன ஆணை: அமைச்சர் அன்பரசன் வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Anbarasan ,Pallavaram ,Labor Welfare Department ,Thamo.Anparasan ,Tamil Nadu Department of Labor Welfare and Skill Development ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...