×

இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள் புவிவட்டபாதையில் நிலை நிறுத்தம்: ஜிஎஸ்எல்வி எப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது

சென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் 3 செயற்கைக்கோளை அனுப்பி, நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது. அதனையடுத்து, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 விண்கலத்தையும் தனது இலக்கான எல் 1 புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தி சாதனை படைத்தது. மேலும் இந்த ஆண்டின் முதல் நாளிலேயே விண்வெளியில் கருந்துளை ஆய்வுக்கான எக்ஸ்போசாட் செயற்கைகோளை, ஜி.எஸ்.எல்.வி சி58 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. தொடர்ந்து, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வானிலை தொடர்பான ஆய்வுகளுக்காக இன்சாட் செயற்கைக்கோள்கள் கடந்த 1982ம் ஆண்டு முதல் அனுப்பட்டு வருகிறது. தற்போது 3ம் தலைமுறை இன்சாட் வகை செயற்கைக்கோள்கள் பயன்பாட்டில் உள்ளன. ஏற்கெனவே செலுத்தப்பட்ட 3ம் தலைமுறை இன்சாட் செயற்கைக்கோள்களில் இன்சாட்-3டி மற்றும் இன்சாட்-3டிஆர் செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இன்சாட்-3டிஎஸ் விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டது.

பெங்களூரில் உள்ள இஸ்ரோ ஆய்வு மையத்தில் இன்சாட் செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டு, அதன் பாகங்கள் மற்றும் இறுதி கட்ட சோதனைகள் கடந்த மாதம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. கடந்த மாத இறுதியில் இன்சாட்-3டிஎஸ் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஹரிக்கோட்டாவிற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து சோதனைகளுக்கு பின் கடந்த பிப்.11ம் தேதி 2வது ஏவுதளத்திற்கு கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து எரிபொருள் நிரப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இறுதி கட்டமாக நேற்று முன்தினம் கவுன்ட்டவுன் தொடங்கியது. இதையடுத்து நேற்று மாலை 5.35 மணிக்கு இன்சார் 3டிஎஸ் செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி எப் 14 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. முதலில் 4 பூஸ்டர்கள் தானியங்கி ஏவுதல் செயல் முறையில் எரியூட்டப்பட்டது. பின்னர் திட எரிபொருள் இன்ஜின் எரியூட்டப்பட்டு ராக்கெட் தீப்பிழம்பை வெளியேற்றி மேலே எழுந்தது, தொடர்ந்து இரண்டாவது எஞ்சினும் சரியான நேரத்தில் எரியூட்டப்பட்டு சரியான பாதையில் ராக்கெட்டை பயணிக்க வைத்தது. தொடர்ந்து முக்கிய கட்டமான செயற்கைக்கோள் இருக்கும் பகுதி 4 நிமிடங்களில் பிரிந்தது, பின்னர் செயற்கைக்கோள் தனியாக பிரிந்து பயணிக்க தொடங்கியது. செயற்கைக்கோள் தொடர்ந்து பயணித்து திட்டமிட்டப்படி 18 நிமிடங்களில் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டவுடன் இஸ்ரோ விஞ்ஞானிகள் கரகோஷங்களை எழுப்பியும், ஒருவொருக்கு ஒருவர் வாழ்த்து கூறியும் சந்தோஷத்தை பகிர்ந்துக் கொண்டனர். அப்போது பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் இன்சாட் 3டிஎஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. செயற்கைக்கோள் திட்டமிட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இந்த ஏவுதல் மூலம் ஜிஎஸ்எல்வியின் நம்பகத்தன்மை அதிகரித்துள்ளது. விரைவில் நாசா இஸ்ரோ இணைந்து நிசார் திட்டம் செயல்படுத்தப் படவுள்ளது என்று கூறினார்.

இந்த செயற்கைக்கோள் மேம்படுத்தப்பட்ட வானிலை ஆய்வுகளை மேற்கொள்ளவும், வானிலை முன்னறிவிப்பு மற்றும் பேரிடர் எச்சரிக்கைக்காக நிலம் மற்றும் கடல் பரப்பை கண்காணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. செயற்கைக் கோளில் பல பேலோடுகள் பொருத்தப்பட்டுள்ளன, அதில் 6 சேனல் இமேஜர், 19 சேனல் சவுண்டர் மற்றும் 2 தகவல் தொடர்பு உள்ளிட்ட அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. டேட்டா ரிலே டிரான்ஸ்பாண்டர் கருவி மற்றும் செயற்கைக்கோள் உதவி தேடல் மற்றும் மீட்பு டிரான்ஸ்பாண்டர் ஆகியவை இரண்டு தொடர்பு கருவிகளும் உள்ளன. இந்த செயற்கைக்கோள் மூலம் தானியங்கி தரவு சேகரிப்பு தளங்கள் மற்றும் தானியங்கி வானிலை நிலையங்களில் இருந்து வானிலை, நீரியல் மற்றும் கடல்சார் தரவுகளைப் பெறுவது மற்றும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை மேம்படுத்தப்படும். தற்போது பூமியிலிருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் சேர்க்கை கோள் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. இது இன்னும் சில நாட்களில் பூமியில் இருந்து 38,000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள அபோஜியில் புவி நிலைப் பாதையில் நிறுத்தப்பட்டு ஆய்வு பணிகளை மேற்கொள்ளும் என்று கூறினார்.

The post இன்சாட்-3 டிஎஸ் செயற்கைக்கோள் புவிவட்டபாதையில் நிலை நிறுத்தம்: ஜிஎஸ்எல்வி எப் 14 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது appeared first on Dinakaran.

Tags : Earth ,CHENNAI ,ISRO ,South Pole of the Moon ,Moon ,South Pole ,Aditya ,Sun ,Dinakaran ,
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...