×

விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை

சென்னை: தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்கச் சதி செய்ததாக சினிமா பைனான்சியர் ஆதிலிங்கம் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021ல் 300 கிலோ ஹெராயின் போதைப் பொருள், 5 ஏகே 47 துப்பாக்கிகள், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 1000 தோட்டாக்களை ரோந்து பணியில் ஈடுபட்ட கடலோர காவல்படையினர் கைப்பற்றினர். முதற்கட்ட விசாரணைக்கு பிறகு, போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இலங்கையை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.

என்.ஐ.ஏ கொச்சி அதிகாரிகள் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். இதில், விடுதலை புலிகள் இயக்கத்தை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் போதைப் பொருட்கள், ஆயுதக்கடத்தல் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து, இலங்கைத் தமிழர்கள் உள்பட 13 பேரை என்.ஐ.ஏ கைது செய்து, கடந்த ஆண்டு ஜூன் 15ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ‘இவர்கள் அனைவரும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்டிருந்ததும், இந்திய பெருங்கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டதாகவும்,’ தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த வழக்கில் நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் வேலை பார்த்த முன்னாள் உதவியாளரான சென்னையை சேர்ந்த ஆதிலிங்கத்துக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. குறிப்பாக போதைப்பொருள் மற்றும் ஆயுதகடத்தல் மூலம் கிடைத்த பணத்தை குணசேகரன் தலைவராகவும், ஆதிலிங்கம் துணை தலைவராகவும் இருக்கும் வகையில் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா என்ற அரசியல் கட்சியை தமிழ்நாட்டில் ஆரம்பித்து நிதி பரிமாற்றம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து, 14வது நபராக ஆதிலிங்கத்தை கைது செய்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், ஆதிலிங்கம் மீது பூந்தமல்லி என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றத்தில் அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்த வழக்கில் 14வது நபராக ஆதிலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களை சட்டவிரோதமாக மாற்றிக் கொடுக்கும் வேலையை இவர் செய்துள்ளார். போதைப் பொருட்கள் விற்பனை மூலம் பெற்ற பணத்தை, ஹவாலா முறையில் மாற்றம் செய்யும் ஏஜென்டாகவும் ஆதிலிங்கம் செயல்பட்டுள்ளார். இந்த பணம் விடுதலை புலிகள் இயக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படத்துறையில் பைனான்சியராக பணிபுரிந்த போது, இலங்கையை சேர்ந்த குணசேகரன், அவரது மகன் திலீபன் உட்பட விடுதலை புலிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்பு கொண்டு ரகசியமாக செயல்பட்டு வந்திருக்கிறார். இவை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post விடுதலைப்புலிகள் அமைப்பை உயிர்ப்பிக்க சதி சினிமா பைனான்சியர் மீது என்ஐஏ குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : NIA ,LTTE ,CHENNAI ,Adi Lingam ,Dinakaran ,
× RELATED பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க.....